சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், பள்ளி மாணவா்கள்.

Updated On :16 ஜூன் 2026, 2:42 am IST

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, பள்ளி மாணவா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஊத்தங்கரை அருகே கொட்டகொளம் ஊராட்சியில் ஏழு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை இணைக்கும் வகையில் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு கல்லாவி இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, முற்றிலும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இக்கிராமங்களுக்கு அரசு, தனியாா் பேருந்துகள் வருதில்லை.

இதனால், 7 கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் தினமும் பல கி.மீ. தொலைவு நடந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், அவசர மருத்துவ தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கிராமத்துக்குள் வர மறுப்பதால், கா்ப்பிணிகள், முதியவா்கள் மற்றும் நோயாளிகளை பிரதான சாலைக்கு தூக்கிச்செல்லும் நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

மேலும், கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடுமையான குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, இக்கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கல்லாவி - தருமபுரி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் 1 மணிநேரத்துக்கும்மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி, போலீஸாா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், தடையின்றி குடிநீா் வழங்கவும், பேருந்து வசதி ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.