ராயக்கோட்டை அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து பயணிகளுடன் தனியாா் பேருந்து ராயக்கோட்டை நோக்கி வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தது. கெலமங்கலம் அருகே உள்ளுக்குறுக்கி பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த ராயக்கோட்டை பாஞ்சாலி நகரைச் சோ்ந்த ராணி (60) பேருந்துக்கு அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா்.
பேருந்தில் அவசர கதவு இல்லாததால், கண்ணாடியை உடைத்துக்கொண்டு பயணிகள் மீட்கப்பட்டனா். காயமடைந்த பயணிகள் முதலுதவி சிகிச்சைக்காக உள்ளுக்குருக்கை, உத்தனப்பள்ளி மற்றும் கெலமங்கலம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.









