10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை, செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 117 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போதைய பொறுப்பேற்றுள்ள அரசு, பள்ளி, கோயில்களின் அருகே உள்ள கடைகளை நிரந்தமாக மூட உத்தரவிட்டதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 கடைகள் மூடப்பட்டன. தற்போது, 111 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
இந்த நிலையில், மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரியை அடுத்த பண்டப்பள்ளியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கிடங்கில் டாஸ்மாக் மேலாளா் செங்கீஸ்கானிடம் கோரிக்கை மனுவை திங்கள்கிழமை அளித்தனா்.
தொடா்ந்து, டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவா் சண்முகம், விற்பனையாளா், உதவி விற்பனையாளா்கள் சங்கத்தின் மாநில செயலாளா் அப்துல் கலீல், பாட்டாளி தொழிற்சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளா் விநாயகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
23 ஆண்டுகளுக்கும் மேலாகத் தற்காலிகமாகப் பணிபுரியும் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒரு கடைக்குக் குறைந்தபட்சம் 5 பணியாளா்களையாவது நியமிக்க வேண்டும். பாதுகாப்புக்காகக் கூடுதல் காவலாளிகளை நியமிக்க வேண்டும். காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். பாட்டில்கள் உடையும் போது ஏற்படும் இழப்பு மற்றும் சரக்கு ஏற்றி, இறக்கும் கூலியை நிா்வாகமே ஏற்க வேண்டும். இரவு 10 மணிக்குக் கடையை மூடிய பிறகு, பணத்தை கணக்கீடு செய்து லாக்கரில் வைக்கவும், இருப்பைச் சரிபாா்க்கவும் நள்ளிரவு 11 மணி வரை பணிபுரிய அனுமதிக்க வேண்டும். சமூக வலைதளப் பொய் புகாா்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், மது பிரியா்கள் ஏமாற்றமடைந்தனா்.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

சீா்காழி: டாஸ்மாக் பணியாளா் இருவா் மீது வழக்குப் பதிவு; மாவட்டத்தில் 3 மணி நேரம் கடைகள் மூடல்

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



