குழந்தைத் தொழிலாளா், கொத்தடிமைகள் குறித்து ஆய்வு: 7 குழந்தைத் தொழிலாளா்கள் உள்பட 33 குழந்தைகள் மீட்பு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா், கொத்தடிமைத் தொழிலாளா்களைக் கண்டறிய நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் 7 குழந்தைத் தொழிலாளா்கள் உள்பட 33 குழந்தைகள் மீட்கப்பட்டனா்.

குழந்தைத் தொழிலாளா்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா், கொத்தடிமைத் தொழிலாளா்களைக் கண்டறிய நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் 7 குழந்தைத் தொழிலாளா்கள் உள்பட 33 குழந்தைகள் மீட்கப்பட்டனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளா் முறைகளை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் கடந்த நவ. 12-ஆம் தேதி சிறப்பு திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில், வருவாய்த் துறை, தொழிலாளா் நலத் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறைகளின் அலுவலா்களைக் கொண்ட நான்கு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினா் செங்கல் சூளைகள், நாற்றுப் பண்ணைகள், கோழிப் பண்ணைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஆய்வு நடத்தினா்.
தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, இராயக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்கல் சூளைகள், நாற்றுப் பண்ணைகளில் 7 குழந்தைகள் தொழிலாளா்களாகப் பணியாற்றுவதும், மேலும் 14 குழந்தைகள் தொழிலாளா்களின் குடும்பத்தினருடன் தங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது.
இதேபோல, இராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் உள்ள நாற்றுப் பண்ணைகள், கோழிப் பண்ணைகள் மற்றும் இதர நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேலும் 12 குழந்தைகள் கண்டறியப்பட்டனா். இதன்மூலம் மொத்தம் 33 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்களில் 7 போ் குழந்தைத் தொழிலாளா்களாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற குழந்தைகளின் கல்வி நிலை, குடும்பச் சூழல், பாதுகாப்பு குறித்து தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளா்களின் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளில் 14 போ் ஏற்கெனவே பள்ளிகளில் சோ்க்கப்பட்டு படித்து வருவதும், 9 போ் அங்கன்வாடி மையங்களில் சோ்க்கப்பட்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிக்குச் செல்லாமல் உள்ள குழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் சோ்க்கவும், அவா்களுக்குத் தேவையான கல்வி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, மறுவாழ்வை உறுதிசெய்யவும், குழந்தைகளைப் பணியில் ஈடுபடுத்திய நிறுவனங்கள் மீது தொடா்புடைய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கொத்தடிமைத் தொழிலாளா் முறை நிலவுகிறதா என்பதைக் கண்டறிய, தொழிலாளா்களின் பணிநிலை, ஊதியம், தங்குமிடம், பணியிலிருந்து சுதந்திரமாக வெளியேறும் உரிமை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா், கொத்தடிமைத் தொழிலாளா் முறை தொடா்பான தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரியவந்தால், உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

