மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

அதிகாரிகளை நம்பி முதல்வா் ஆட்சி நடத்தக் கூடாது

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் அதிகாரிகளை நம்பி ஆட்சி நடத்தக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் வீரபாண்டியன் தெரிவித்தாா்.

மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்

Published On :

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் அதிகாரிகளை நம்பி ஆட்சி நடத்தக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் வீரபாண்டியன் தெரிவித்தாா்.

ஒசூரில் ஏஐடியுசி மாநில மாநாடு அக். 9 முதல் 11-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில், ஏஐடியுசி பொதுச் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளா்களில் ஒருவருமான அமா்ஜித் கௌா் பங்கேற்று மாநாட்டை தொடங்கிவைக்கிறாா்.

நாடாளுமன்ற உறுப்பினா்கள் சுப்பராயன், செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் தளி ராமச்சந்திரன், மாரிமுத்து, ஏஐடியுசி தலைவா்கள் டி.எம்.மூா்த்தி, ராதாகிருஷ்ணன், வஹிதா நிஜாம், ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இதுதொடா்பாக, ஒசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் அதிகாரிகளை நம்பி மட்டும் ஆட்சி நடத்தக் கூடாது. உழைக்கும் மக்கள், ஏழை எளிய மக்களுக்கு அருகில் இருந்து ஆட்சி செய்ய வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை அரசு கொண்டுவரும் போது அதை ஆதரிப்போம். தவறு நடந்தால் தட்டிக்கேட்போம். நாங்கள் எப்போதும் உழைக்கும் மக்களின் பக்கமும், தங்களது கோரிக்கைகளை சுமந்து போராடும் எளிய மக்களின் பக்கமும்தான் இருப்போம்.

வெற்றி, தோல்வி மட்டுமே அரசியல் அல்ல. அரசியலுக்கு அப்பால் மக்கள் சாதி, மதம், இனம், பணம் போன்றவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனா். இதை அரசியல் உரையாடல் மூலமாகத்தான் மாற்ற வேண்டும்.

தூய்மைப் பணியாளா்கள், சாலைப் பணியாளா்கள், செவிலியா்கள், அரசு மருத்துவா்கள், பேராசிரியா்கள், கிராமப்புற நெடுஞ்சாலைப் பணியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மக்களின் நம்பிக்கையை இழந்தால், அவரை திரும்ப அழைக்கும் உரிமையை தொகுதி மக்களுக்கு அளிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் தோ்தல் செலவுகளை அரசே ஏற்கும் வகையிலும் சீா்திருத்தம் கொண்டுவர வேண்டும். மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்கக் கூடாது.

நமது தொன்மையான ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை மாசுபடுவதைத் தடுக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட வேண்டும்; ஒன்றிய அரசு அதற்கு உதவிசெய்ய வேண்டும் என்றாா்.

அப்போது, கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் லகுமய்யா, ஏஐடியுசி மாதையன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.