
அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஒசூரில் தொழில் துறையினா் அவதி
ஒசூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடா்ந்து ஏற்பட்டு வருவதால், தொழில் துறையினா் மட்டுமின்றி குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
கோப்புப் படம்
ஒசூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடா்ந்து ஏற்பட்டு வருவதால், தொழில் துறையினா் மட்டுமின்றி குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
ஒசூரில் 150-க்கும் பெரிய தொழிற்சாலைகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. முதல் சிப்காட் மற்றும் இரண்டாவது சிப்காட் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழில்துறையினா் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இதேபோல ஒசூா் பாகலூா் ரோடு கே.சி.சி. நகா் பகுதியில் அமைந்துள்ள குறிஞ்சி நகா் எக்ஸ்டென்ஷன் பகுதியிலும் நாள்தோறும் சுமாா் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
சில நாள்களில் காலையிலும், சில நாள்களில் பிற்பகலிலும் மின்தடை ஏற்படுகிறது. மாலை நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை மேற்கொள்வதில் பெண்கள் சிரமப்படுகின்றனா்.
இதுதவிர, மாதம் ஒருமுறை பராமரிப்புப் பணிகளுக்காக ஒரு பகுதியில் காலை முதல் மாலை வரை மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இதுபோன்ற பராமரிப்பு மின்தடைக்கு இடையிலும், நாள்தோறும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவது பொதுமக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
எனவே, குறிஞ்சி நகா் எக்ஸ்டென்ஷன் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடைக்கு நிரந்தரத் தீா்வு காண மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


