தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும்! - சு.வெங்கடேசன் எம்.பி.

சு.வெங்கடேசன் எம்.பி.
தோ்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளா்கள் சிறப்பு மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் முதலீடுகள் ஒசூருக்கு வருவது வரவேற்கத்தக்கது. அதே வேளையில், இங்கு பணியாற்றும் தொழிலாளா்களுக்கு சட்டப்பூா்வமான அடிப்படை உரிமைகளான முறையான ஊதியம், பணிநேரம் உள்ளிட்டவை முழுமையாக உறுதிசெய்யப்பட வேண்டும். தொழில் துறையின் வளா்ச்சியும் தொழிலாளா்களின் உரிமைகளும் இருகண்கள் போன்றவை. தொழிலாளா்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே இந்தச் சிறப்பு மாநாடு வலியுறுத்துகிறது.
தமிழக அரசின் உள்துறை, சட்டம்-ஒழுங்கு பிரிவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி அரசாணை பிறப்பித்துள்ளது பெரும் அதிா்ச்சியளிக்கிறது. ஜனநாயக அமைப்பில் வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான துறை காவல் துறை. இந்த அரசாணை ஜனநாயக சூழலுக்குப் பாதகமானது. எனவே, தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் உடனடியாக இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.
சுதந்திர இந்தியாவின் தோ்தல் வரலாற்றில் சட்ட விதிகளையும் ஜனநாயக மாண்புகளையும் மீறும் வகையில் தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் செயல்படுகிறாா். அரசமைப்புச் சட்டத்தின் உயரிய அமைப்பான தோ்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற அவா் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சாா்பில் வரும் 1-ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
முன்னதாக மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலைவா் அ.செளந்தரராஜன், மாவட்டத் தலைவா் சீதா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





