நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்ற அகில இந்திய அளவிலான மெகா மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் 10 கி.மீட்டர் பந்தய இலக்குப் போட்டியில் தருமபுரி வீரர் முதலிடம் பிடித்தார்.
ராசிபுரம் ரோட்டரி சங்கம்-அமில்மா ஐஸ் கிரீம் நிறுவனம் இணைந்து நடத்திய இப்போட்டிகளில் தில்லி, கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஓட்டப் பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.
பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி போன்றவற்றின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த மராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
10 கி.மீ. 5 கி.மீ, 3 கி.மீ., 750 மீட்டர் என்ற நான்கு பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 6 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 750 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றனர். இப் போட்டிகள் ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கல்லூரி வளாகத்தில் தொடங்கி மீண்டும் அங்கேயே முடிவடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
3 கி.மீ. தொலைவிலான போட்டியில் பங்கேற்றோர், பவர் ஹவுஸ் வரை சென்று திரும்பினர். 5 கி.மீ.தொலைவு போட்டியில் ரயில்நிலைய மேம்பாலம் வரை சென்று திரும்பினர். 10 கி.மீ. தொலைவு போட்டிகளுக்கு கல்லூரியில் துவங்கி, ராசிபுரம் பழைய நீதிமன்றம் வரை சென்று மீண்டும் திருவள்ளுவர் கல்லூரிக்குத் திரும்பினர்.
10 கி.மீ. தொலைவு ஓட்டத்தில் முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ. 7 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ. 5 ஆயிரம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 5 கி.மீ. தொலைவு ஓட்டத்துக்கு முதல் பரிசு ரூ. 7 ஆயிரம், 3 கி.மீ. தொலைவு ஓட்டத்தின் முதல் பரிசு ரூ. 5 ஆயிரம் என ஆண்கள் , பெண்களுக்கு தனித்தனியாகவும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆடவர் பிரிவில் 10 கி.மீ. ஓட்டத்தில் தருமபுரி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சி. நரேஷ்குமார், 31.55 வினாடிகளில் இலக்கை முடித்து முதலிடம் பெற்றார். கோவையைச் சேர்ந்த எஸ். வினோத் 2-ஆம் இடமும் பெற்றனர். மகளிர் பிரிவில் 10 கி.மீ. தொலைவு ஓட்டத்தில் சென்னையைச் சேர்ந்த கே.கீதா முதலிடமும், ராசிபுரத்தைச் சேர்ந்த எம். பிரேமா 2-ம் இடமும், கே. சுகுணா 3-ஆம் இடமும் பெற்றனர்.
ஆடவர் பிரிவு 5 கி.மீ. ஓட்டத்தில் கோவை பி. சங்கர் முதலிடமும், சிவகாசி பி. ராஜேந்திரகோபால் 2-ஆம் இடமும், சேலம் ஆர். அருள்ராஜ் 3-ஆம் இடமும் பெற்றனர். இந்த மராத்தான் ஓட்டத்தில் ஒரு கால்களை இழந்து செயற்கை கால்கள் பொருத்திய மதுரையைச் சேர்ந்த வீரர் வி.வடிவேல் தன்னம்பிக்கையுடன் பங்கேற்று 5 கி.மீ. ஓட்டத்தை ஓடி முடித்து சான்றிதழ் பெற்றார். இதே போல் கோவையைச் சேர்ந்த 79 வயதான வெங்கடேசன் என்ற முதியவர் 5 கி.மீ. தொலைவு ஓடி முடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
போட்டிகளில் வென்ற வீரர்களுக்கான பரிசளிப்பு விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் கே. குணசேகர் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம். ராமசாமி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் தர்மேஷ் ஆர். படேல், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ( தேர்வு) ஏ.கே.நடேசன் ஆகியோர் பங்கேற்று ரொக்கப் பரிசு, பதக்கங்கள், சான்றிதழ்கள் வீரர்களுக்கு வழங்கினர்.
இதில் ரோட்டரி தேர்வு ஆளுநர் வெங்கடேன், திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் மணிமேகலை, ரோட்டரி சங்கச் செயலர் டி. வினோத், பொருளாளர் ஏ.இளங்கோ, மராத்தான் திட்ட சேர்மன் ஜெ.கே. சுரேஷ் உள்ளிட்ட முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.