காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.50 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, குமாரபாளையம் பகுதியில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றில் தற்போது விநாடிக்கு 1.50 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 11-ம் தேதி முதல் காவிரிக் கரையோரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நீர் வரத்துக்கேற்ப வெள்ளம் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கடந்த சில நாள்களாக வெள்ளத்தின் அளவு விநாடிக்கு 60 ஆயிரம் கன அடியாகக் குறைந்ததால் முகாம்களில் தங்கியுள்ளோர் மீண்டும் வீடு திரும்பினர். இந்நிலையில், கர்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடி திறக்கப்பட்டதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, கரையோரங்களை வெள்ளம் சூழ்ந்தது.
இந்நிலையில், மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குமாரபாளையத்தில் இந்திரா நகர், கலைமகள் வீதி, மணிமேகலைத் தெரு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் எச்சரிக்கையை மீறி வீடுகளில் வசிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.பழனிச்சாமி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன், ஆணையர் ஆர்.மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது, வீடுகளில் வசித்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவரும் மீண்டும் வெளியேறி மேடான பகுதிகளுக்குச் சென்றனர். வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால் குமாரபாளையம் காவிரி ஆற்றின் கரையோரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசிய மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலக்கரை பகுதியினைப் பார்வையிட்ட ஆட்சியர் ஆசியா மரியம் மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.
அப்போது, பொது மக்கள் அவசரி கால உதவிக்காக 1077 என்ற எண்ணையும், மருத்துவ உதவிக்கு 104, அவசர ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, குமாரபாளையம் வட்டத்தைச் சேர்ந்தவர் 9942057420, திருச்செங்கோடு வட்டத்தைச் சேர்ந்தவர் 9445000545, பரமத்திவேலூர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் 9445000546, நாமக்கல் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் 9445000543 ஆகிய எண்களையும், தீயணைப்புத் துறையின் 101 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம் - காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.50 லட்சம் கன அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்வதால் குமாரபாளையம் - பவானிக்கு இடையே உள்ள பழைய பாலத்தில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாலத்தின் நுழைவாயிலில் தடுப்புகள் வைத்துக் கட்டப்பட்டதோடு, வழக்கமாகச் செல்லும் இலகு ரக மற்றும் இரு சக்கர வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் நடந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. புதிய பாலத்திலும், தேசிய நெடுஞ்சாலை பாலத்திலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.