சத்துணவு, அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம்: அமைச்சர் பி.தங்கமணி

கட்டடம் தேவை என அறியப்பட்ட சத்துணவு  மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என
Updated on
2 min read

கட்டடம் தேவை என அறியப்பட்ட சத்துணவு  மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் சார்பில் சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். ஈரோடு எம்பி எஸ்.செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார். விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியது:
கட்டடங்கள் தேவையென கருதப்பட்ட சத்துணவு, அங்கன்வாடி மையங்களுக்கு எம்பி, எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய கட்டடங்கள் கட்டிதரப்பட்டுள்ளது. 
குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சமைத்து வழங்குவதற்கு பல்வேறு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சத்துணவு சமையலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் வேலைப்பளுவைக் குறைத்திடுவதற்கும், குழந்தைகளுக்கு சுவையான, சத்தான உணவினை சமைத்து வழங்குவதற்கும் தற்போது மிக்ஸி, கிரைண்டர்களும் வழங்கப்படுகின்றது. 
 இத்தனை வசதிகளையும் கொடுக்கப்பட்டதன் முக்கிய காரணமே குழந்தைகளுக்கு சத்தான, சுவையான உணவினை சமைத்து வழங்கி,  உடல் ஆரோக்கியத்திற்கு உதவிட வேண்டும் என்பதற்காக தான் என்றார். 
53 லட்சம் குழந்தைகள் பயன்:
சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை அமைச்சர் வெ. சரோஜா பேசியது: எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 53.31 லட்சம் பள்ளிக் குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்கு 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.1,793.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 434 திட்டங்கள் மூலம் 54,439 மையங்களில் 34.73 லட்சம் பயனாளிகள் நேரடியாகவும், 40.25 லட்சம் பயனாளிகள் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்துக்கு ரூ.1 ,917.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   சமூக பாதுகாப்பு உதவித்தொகை ரூ. 3,790 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ. 466 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ள குமாரபாளையம் கலைவாணி  தெருவிலுள்ள அங்கன்வாடி மையம், பள்ளிபாளையம் மணல்மேடு பகுதியிலுள்ள அங்கன்வாடி மையம், மோகனூர் தீர்த்தம்பாளையம் மேற்கு அங்கன்வாடி மையம் மற்றும் எருமப்பட்டி ஜம்புமடை புதுத்தெருவிலுள்ள அங்கன்வாடி மையம் ஆகிய 4 அங்கன்வாடி மையங்களை சேர்ந்த பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, ஐ.எஸ்.ஓ தரச்சான்றுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள்,  இதேபோல் மற்ற அங்கன்வாடி மையங்களும் ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெறுவதற்கு தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்றனர். 
 தொடர்ந்து எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்திலுள்ள 996 சத்துணவு மையங்களுக்கும் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள 1,599 அங்கன்வாடி மையங்களுக்கும், இலவச மிக்ஸி மற்றும் கிரைண்டர்களை அமைச்சர்கள் வழங்கினர். 
விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) எம்.மாரிமுத்துராஜ் வரவேற்றார்.  பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் எஸ்.செந்தில்,  திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் ரகுநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.கே.சுப்பிரமணி, பள்ளிபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.எஸ்.வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் எஸ்.பத்மாவதி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com