தமிழகத்தில் கிராமப்புறங்களில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 70 சதவீத வீடுகளில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அரசின் மானிய திட்டம், அழுத்தங்களால் கட்டப்பட்ட இந்தக் கழிப்பறைகளை, மக்கள் தொடர்ந்து பயன்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடங்கள் குறித்து நாடு முழுவதும் மத்திய சுகாதாரத் துறை களப்பணி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே கிராமப்புறங்களில் கழிப்பறை வசதி மற்றும் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 90 சதவீதத்திற்கும் மேல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் உள்ள மக்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் திறந்தவெளி கழிப்பிடங்களைப் பயன்படுத்தி வருவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 சத வீடுகளில் கழிப்பறை இல்லை: 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய கிராமங்களில் 70 சத வீடுகளில் கழிப்பறை இல்லை. தமிழகத்தில் 50 சதவீத குடும்பங்களில் கழிப்பறை இல்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் 60 கோடி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியக் கிராமப்புற வீடுகள் அனைத்தையும் கழிவறை வசதி உள்ள வீடுகளாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறைகளைக் கட்ட ரூ. 12,000 மானியத்தை அரசு வழங்குகிறது.
பயன்படுத்தும் நோக்கில் கட்டப்படாத கழிப்பிடங்கள்: கிராமப்புறப் பள்ளிகளில் முறையான கழிப்பிட வசதிகள் செய்து தரப்படவில்லை. போதுமான தண்ணீர் வசதியும் இருப்பதில்லை. கிராமங்களில் கட்டித் தரப்படுகின்ற தனிக் கழிப்பறைகளாகட்டும், பொதுக் கழிப்பறைகளாகட்டும் ஒப்புக்காகவும், கணக்குக் காட்டுவதற்காகவுமே கட்டித் தரப்படுகின்றன. தரமானவையாக கட்டித் தரப்படுவதில்லை. அவற்றிலும் நிரந்தரமான, போதுமான தண்ணீர் வசதி இல்லை.
தண்ணீர் வசதி இல்லாததால், அவற்றைப் பயன்படுத்துவதில் சில தயக்கங்களும், ஒதுக்குதல்களும் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் சுமார் 50 சதவீதம் பேர் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில்லை என்று தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
செயல்படாத சுகாதார வளாகங்கள்: தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டமான ஒருங்கிணைந்த குழந்தைகள், மகளிர் சுகாதார வளாகங்கள் பெரும்பாலான கிராமங்களில் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.
2019- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது தனது லட்சியம் என பிரதமர் மோடி 2014-ஆம் ஆண்டே அறிவித்தார். தற்போது 3 மாநிலங்கள், 101 மாவட்டங்கள், 1,67,226 கிராமங்களில் தற்போது திறந்தவெளி கழிப்பிடம் பயன்பாட்டில் இல்லை. மொத்தம் 3 கோடியே 48 லட்சத்து 79,320 வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்று கடந்த ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நூறு நாள் திட்டத்தால் நிகழ்ந்த சாதனை: தமிழகத்தில் கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் கட்டாயம் தனி நபர் இல்லக் கழிப்பறையைக் கட்ட வேண்டும் அப்போதுதான் தொடர்ந்து பணி வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்ததால், கிராமங்களில் அரசு வழங்கும் ரூ.12,000 மானியத்தில் சுமார் 70 சத வீடுகளில் கடந்த ஆண்டு தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த மக்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, அரசின் கட்டாயத்தில் கட்டியுள்ளனர். கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசுத் தொடங்க வேண்டும்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், மலைவேப்பங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.ஜி. ராஜேந்திரன் தெரிவித்தது:
தமிழக கிராமங்களிலுள்ள ஒட்டுமொத்த மக்களும் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது என அந்தந்த மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.
இப்போது கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள தனி நபர் இல்லக் கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இதற்காக இலவசமாக சின்டெக்ஸ் டேங்க், கூடுதல் எண்ணிக்கையில் பொது குடிநீர் குழாய் இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கிராமங்கள்தோறும் மக்கள்தொகைக்கு ஏற்ப பொது சுகாதார வளாகங்களை அமைத்துத் தர அரசு முன்வர வேண்டும். அவற்றை ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் பராமரிக்க வகை செய்ய வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் கழிப்பறையைப் பயன்படுத்துமாறு மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு: இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர் என்.எஸ்.கே. சக்திவேல் கூறியது: வீடுகளில் கழிப்பறையின் அவசியம் மற்றும் பயன்பாட்டை 8ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிப்பறை இல்லாத வீடுகள் விவரம் மாணவர்கள் மூலம் கண்டறிந்து தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
தமிழகத்தில் திறந்தவெளிக் கழிப்பிடங்களை ஒழிக்கத் தெருவுக்கு ஒரு மாணவரை சுகாதாரத் தூதுவராக நியமிக்க தமிழகப் பள்ளிக் கல்வித்துறை கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.