அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் விழா

பரமத்திவேலூர், வெங்கமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்விச் சீர் வழங்கும் 
Updated on
1 min read

பரமத்திவேலூர், வெங்கமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்விச் சீர் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பெற்றோர், மாணவ, மாணவியர்கள் ஊர்வலமாக வந்து பள்ளிக்கு கல்விச்  சீர் வழங்கினர்.
பொத்தனூர் பேரூராட்சிக்கு உள்பட்ட வெங்கமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கணினி பயன்பாட்டு பயிற்சி, ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவது, ஓவியப் பயிற்சி, மாலை நேர சிறப்பு வகுப்புகள், சுற்றுச்சூழலில் மாணவ, மாணவியர் பங்கு உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர், தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்ப்பதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பள்ளியில் தற்போது, 234 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 9 ஆசிரியர்கள், ஆசிரியைகள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என பள்ளித் தலைமை ஆசிரியை மாலதி தெரிவித்தார்.
இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவியர் ஊர்வலமாக சென்று பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கினர். பள்ளி அருகே தொடங்கிய கல்விச்சீர் ஊர்வலம் கபிலர்மலை சாலை,  பழைய தேசிய நெடுஞ்சாலை, நான்குசாலை மற்றும் பொத்தனூர் சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பின்னர், நடைபெற்ற கூட்டத்துக்கு கபிலர்மலை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை மாலதி வரவேற்றுப் பேசினார். விழாவில் பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் நாராயணன்,  கரூர் மாவட்டம், புகழூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முனுசாமி, பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் மாரப்பன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி கனகமணி, முன்னாள் மாணவர் செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விழாவில் பெற்றோர், முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com