பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தான் கொடுத்த மனுக்களையே மாலையாக அணிந்து வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த விவசாயி ஒருவர், கழுத்தில் மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில் அவர் சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பதும், நீர் வழி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனுக்களை மாலையாக அணிந்து வந்ததும் தெரியவந்தது. அவர் அணிந்திருந்த மனுக்கள் மாலையைப் பறிமுதல் செய்த போலீஸார், அதன்பிறகு மாதேஸ்வரனை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு செல்ல அனுமதித்தனர்.
இதுகுறித்து மாதேஸ்வரன் கூறியது, சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் இரண்டு குட்டைகள் உள்ளன. இந்தக் குட்டைகளுக்கு நீர் வரும் வழிப்பாதை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளது.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பல முறை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுஅளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த கோரிக்கையில் அதிகாரிகள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, பல முறை அதிகாரிகளிடம் அளித்த மனுக்களையே மாலையாக அணிந்து கொண்டு வந்தேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.