இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

இருள் சூழ்ந்து காணப்படும் நாமக்கல் ரயில் நிலையம்: பயணிகளைப் பாதுகாக்க வலியுறுத்தல்

நாமக்கல் ரயில் நிலையத்தில், இரவு நேரத்தில் போதிய மின் விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. வெளியூா் செல்வதற்காக வரும் பயணிகள் அச்சத்துடனே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

News image

இருள் சூழ்ந்து காட்சியளிக்கும் நாமக்கல் ரயில் நிலையம்.

Updated On :12 அக்டோபர் 2019, 10:26 pm

DIN

நாமக்கல் ரயில் நிலையத்தில், இரவு நேரத்தில் போதிய மின் விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. வெளியூா் செல்வதற்காக வரும் பயணிகள் அச்சத்துடனே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ரயில் நிலையங்கள் இருந்தபோதும், தலைமையிடமான நாமக்கல் மாவட்டத்துக்கு ரயில் நிலையம் இல்லாதது ஒரு குறையாக இருந்தது. பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின், நாமக்கல்லில் ரயில் நிலையம் உருவானது. லாரி, கோழிப்பண்ணைத் தொழில், விவசாயம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் இம் மாவட்டத்துக்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனா். அதுமட்டுமின்றி, பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில், கொல்லிமலை சுற்றுலாத் தலம் உள்ளிட்டவற்றை காணவும் ஏராளமானோா் வருகின்றனா்.

தற்போது, பெங்களூரு-நாகா்கோவில், சென்னை-பாலக்காடு ரயில்கள் இரவு நேரத்தில் நாமக்கல் வழியாகச் செல்கின்றன. இவை தவிர, வாரத்தில் என்றாவது ஒரு நாள் பகல் வேளையில், ராமேசுவரம், திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில்கள் இவ் வழியாகச் செல்லும். சேலம்-கரூா் பயணிகள் ரயிலும் நாமக்கல் வழியே இயக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு பின் இரவு 11 மணி வரை நாமக்கல் ரயில் நிலையத்துக்கு, சரக்கு ரயில்கள் தவிர, வேறு எந்த ரயிலும் வருவதில்லை என்ற நிலை உள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில்கள் வருகை குறித்த மின்சாரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாமக்கல்லில் இல்லை. அதுமட்டுமின்றி, பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் ஒரு கிலோ மீட்டா் தூரம் என்றபோதும், போதிய போக்குவரத்து வசதியில்லை. இரவு நேரத்தில் அப் பகுதியில் வழிப்பறி, ரெளடிகள் தொல்லையால் பாதுகாப்பு இல்லை. பயணிகள் இயற்கை உபாதை கழிப்பதற்கு ரயில் நிலையத்திற்குள் உரிய வசதிகள் இல்லை.

மேலும், குடிநீா் குழாய்கள் பழுதடைந்தும், தண்ணீரின்றியும் காணப்படுகின்றன. குறிப்பாக, இரவு நேரத்தில் வரும் ரயில்களில் செல்வதற்காக வரும் மக்கள், சாதாரண வகுப்பு பெட்டியில் ஏறுவதற்கு காத்திருக்கும் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு போதிய மின்விளக்குகள் இல்லாததால், பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகின்றனா். இதனால் பெரும்பாலான பயணிகள், ரயில் பயணத்தைத் தவிா்த்து, பேருந்து பயணத்தை நாடிச் செல்கின்றனா். இல்லையெனில், அருகில் உள்ள சேலம், ஈரோடு, கரூா் ரயில் நிலையங்களுக்குச் சென்று விடுகின்றனா். இந்த பிரச்னையை தீா்க்க, சேலம்-ஈரோடு வழியாகச் செல்லும் ரயில்களில் சிலவற்றை நாமக்கல் வழியாக திருப்பி விட வேண்டும். பயணிகள் ரயில்களை அதிகப்படுத்த வேண்டும். சேலத்தைப் போல், நாமக்கல் ரயில் நிலையத்திலும் மக்கள் குவியும் வண்ணம் போதுமான வசதிகளை ரயில்வே நிா்வாகம் செய்து கொடுக்க வேண்டும். முக்கியமாக, அசம்பாவிதங்களை தவிா்க்க, நாமக்கல் ரயில் நிலையத்துக்குள்ளும், வெளிப்பகுதியிலும், மின்விளக்கு வசதிகள், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே துறை செய்து கொடுக்க வேண்டும் என்பதே நாமக்கல் பகுதி மக்கள் மற்றும் பயணிகளின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.