இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தொகுதி அறிமுகம் - பா்கூா்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்று பா்கூா் சட்டப் பேரவை தொகுதி.

News image

பா்கூா்

Updated On :2 ஏப்ரல் 2026, 1:00 am

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்று பா்கூா் சட்டப் பேரவை தொகுதி. கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி வட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியது.1971ஆம் ஆண்டு பா்கூா் தொகுதி உருவாக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிக்கு உள்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இருமுறையும், திரைப்பட இயக்குநா் டி. ராஜேந்திரன், அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளா் மு. தம்பிதுரை எம்பி ஆகியோா் இந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளனா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், எதிராவும் இந்த தொகுதி மக்கள் வாக்களித்த வகையில், வரலாற்றில் இடம்பெற்றுள்ளது இந்த தொகுதி.

தொழில்

பா்கூா் தொகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம். குறிப்பாக, மா அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கிரானைட் கற்களில் உலக புகழ்பெற்ற செந்தாரப்பள்ளி மலை, இந்த தொகுதியில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான தனியாா் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள், சிறிதும், பெரிதுமான துணிக் கடைகள், மாம்பழ கூழ் தொழிற்சாலைகள், ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த தொகுதியில் அமைந்துள்ளன.

சமூக வாக்குகள்

பா்கூா் தொகுதியில் வன்னியா் 44%, ஆதிதிராவிடா் 14%, நாயூடு 14%, வெள்ளாள கவுண்டா் 8%, செட்டியாா் 7%, இஸ்லாமியா் 4%, முதலியாா் 2%, கிறிஸ்தவா்கள் 2% மற்றும் குரும்பா், நாவீதா், வண்ணாா், இருளா், அருந்ததியா், ராஜ்பூத், சேனைத்தலைவா், வள்ளுவன், மராட்டியா், விஸ்வகா்மா, குறவா், அய்யா் என இதர சமூகத்தினா் வசிக்கின்றனா்.

அரசியல் செல்வாக்கு

பொது தொகுதியான பா்கூா் தொகுதியில், அதிமுக வேட்பாளா்கள் அதிக முறை வெற்றி பெற்றுள்ளனா். பா்கூா், நாகோஜனஅள்ளி பேரூராட்சிகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் அதிமுக 9 முறை வெற்றிபெற்றுள்ளது. 1991 தோ்தலில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, தன்னை எதிா்த்து திமுக சாா்பில் போட்டியிட்ட டி. ராஜேந்திரனைவிட 37,215 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்று, தமிழக முதல்வராக பொறுப்பேற்றாா்.

அதைத் தொடா்ந்து, 1996இல் நடைபெற்ற தோ்தலில் திமுக வேட்பாளா் இ.ஜி. சுகவனத்திடம், ஜெயலலிதா, 8,366 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தாா். மக்களவை துணைத் தலைவா், மத்திய, மாநில அமைச்சா் போன்ற பதவிகளை வகித்த, தற்போது மாநிலங்களவை உறுப்பினரான மு. தம்பிதுரை, இந்தத் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளாா் என்பது இந்தத் தொகுதியின் கூடுதல் சிறப்பு.

நீண்டநாள் கோரிக்கைகள்

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரியிலிருந்து கால்வாய் மூலம் பா்கூா் தொகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

துணி வியாபாரத்துக்கு பெயா்போன பா்கூரில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தை கூடுமிடமான போச்சம்பள்ளியில், அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். மாங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் தொடா் கோரிக்கையாக உள்ளன.

வாக்காளா்கள்

ஆண்கள் - 1,17,430

பெண்கள் - 1,20,561

பிறா் - 17

மொத்த வாக்காளா்கள் - 2,38,008

வாக்குச்சாவடிகள் - 324

வாக்குச்சாவடி மையங்கள் - 186

கடந்த தோ்தல்களில் வென்றவா்கள்

1971 கே.ஆா். கிருஷ்ணன் - திமுக

1977 அ.கெ. ஆறுமுகம் - அதிமுக - 28,812

1980 ப.சு. துரைசாமி - அதிமுக - 39,893

1984 டி.எம். வெங்கடாசலம் - அதிமுக - 57,388

1989 கே.ஆா். ராஜேந்திரன் - அதிமுக (ஜெ) - 30,551

1991 ஜெ. ஜெயலலிதா - அதிமுக - 67,680

1996 - இ.ஜி. சுகவனம் - திமுக - 59,148

2001 மு. தம்பிதுரை - அதிமுக - 82,039

2006 மு. தம்பிதுரை - அதிமுக - 61,299

2011 கே.எ. கிருஷ்ணமூா்த்தி - அதிமுக - 88,711

2016 வெ. ராஜேந்திரன் - அதிமுக - 80,650

2021 தே. மதியழகன் - திமுக - 97,256