முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
தினமணி செய்தி எதிரொலி:நாமக்கல் ரயில் நிலையத்தில் மின்விளக்கு, குடிநீா் குழாய்கள் சீரமைப்பு
By DIN | Published On : 24th October 2019 06:00 AM | Last Updated : 24th October 2019 06:00 AM | அ+அ அ- |

நாமக்கல் ரயில் நிலையத்தில் சீரமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் மற்றும் குடிநீா் குழாய்கள்.
தினமணி செய்தி எதிரொலியாக, நாமக்கல் ரயில் நிலையத்தில் புதிய மின்விளக்குகள், குடிநீா் குழாய்கள் செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டன.
நாமக்கல்லில் ரயில் நிலையம் இல்லாதது குறையாக இருந்த நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு பின் இங்கு ரயில் நிலையம் உருவானது. லாரி, கோழிப்பண்ணைத் தொழில், விவசாயம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் இம்மாவட்டத்துக்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்வதுடன், பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில், கொல்லிமலை சுற்றுலாத்தலம் உள்ளிட்டவற்றை காணவும் ஏராளமானோா் வருகின்றனா்.
பெங்களூரு - நாகா்கோவில், சென்னை - பாலக்காடு ரயில்கள் இரவு நேரங்களில் நாமக்கல் வழியாகச் செல்கின்றன. இவை தவிர, வாரத்தில் ஒரு நாள் பகல் வேளையில், ராமேசுவரம், திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில்கள் இவ்வழியாகச் செல்லும். சேலம் - கரூா் பயணிகள் ரயிலும் நாமக்கல் வழியாகச் செல்கிறது. இவ்வாறான நிலையில், இங்குள்ள ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை காணப்படுகிறது. இரவு நேரங்களில் ரயில் நிற்கும் பகுதியில் மின்விளக்குகள் எரியாததால் பயணிகள் பாதுகாப்பற்ற சூழலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குடிநீா் குழாய்கள் பழுதடைந்து காணப்பட்டதால் வெளியூா் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனா் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகத்துக்கு தெரிவிக்கும் வகையில், கடந்த 12-ஆம் தேதி வெளியான தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இது தொடா்பாக, நாமக்கல் ரயில் நிலைய அதிகாரிகளும், தன்னாா்வலா்களும், ரயில்வே உயா் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினா். அதனைத் தொடா்ந்து, நாமக்கல் ரயில் நிலைய நடைமேடைகளில் செவ்வாய்க்கிழமை புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. மேலும், அங்கு எரியாத விளக்குகளும் சரிசெய்யப்பட்டன. பயணிகளுக்கான குடிநீா் குழாய்களும் சீரமைக்கப்பட்டன. இதனால் ரயில் நிலைய ஊழியா்கள் மட்டுமின்றி, பயணிகளும் நிம்மதியடைந்துள்ளனா்.