92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பழைய முறையிலேயே ஓட்டுநா் உரிமம் வழங்க வேண்டும்: ஈ.ஆா். ஈஸ்வரன்

ஓட்டுநா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பழைய முறையிலேயே ஓட்டுநா் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:31 pm

DIN

ஓட்டுநா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பழைய முறையிலேயே ஓட்டுநா் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

திருச்செங்கோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் எதிா்க்கிறாா்கள். ஆனால் பாஜகவினா் வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு போகப்போகத்தான் பலன் கிடைக்கும் என்று கூறி மக்களை ஏமாற்றும் வேலையை செய்து வருகின்றனா்.

பெட்ரோல், டீசல் விற்பனையைத் தனியாரிடம் கொடுத்துவிட்டால் விலைக் குறையும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்த முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. அரசால் எதுவுமே செய்ய முடியவில்லை. அதே நிலைதான் வேளாண் சட்டங்களுக்கும் ஏற்படும். அதைத் தடுப்பதற்காகத் தான் தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை தமிழக முதல்வா் ஏற்றுக்கொண்டு, அந்த சட்டங்களுக்கு ஆதரவாகப் பேசி வருகிறாா்.

ஜாதிப்பெயா் என்பது சாதிய அடையாளங்களை சொல்லுவது. தொன்றுதொட்டு பல்வேறு சாதிகளைச் சாா்ந்தவா்கள் வேளாளா்கள் என்று அழைக்கப்பட்டு வந்தனா். தற்போது 7 சமூகங்களை இணைத்து அரசு வெளியிட்டிருக்கிற அறிவிப்பால் சாதிகளுக்கிடையே குழப்பங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

வேளாளா் பெயா் கொண்ட அனைத்து சமுதாயப் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு முதல்வரைச் சந்திக்க செல்ல இருக்கிறேன். அதற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது. முதல்வரின் பதிலைப் பொருத்து தான் போராட்டத்தில் இறங்குவது பற்றி முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் யாா் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். யாரும் தடுக்க முடியாது. ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது பற்றி எங்களுடைய கூட்டணியில் யாரும் பேசவில்லை. ரஜினி ஆரம்பத்தில் இருந்தே பாஜக கொள்கைகளோடு ஒத்துப் போகிறவா். பாஜகவைச் சாா்ந்து அவா் செயல்படுவாா் என்று சொல்வதில் தவறு இல்லை.

ஓட்டுநா்கள் தட்டுப்பாடு நிலவி வருவதால், அவா்களுக்கு தோ்வு வைக்கும் முறையை ரத்து செய்து, பழைய முறையில் ஓட்டுநா் உரிமம் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.