தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் அமைச்சா் தங்கமணி
ராசிபுரம்: தமிழகத்தில் மீண்டும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயதீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அதிமுக இளைஞா், இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினா் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சா் பி.தங்கமணி தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா முன்னிலை வகித்தாா்.
இதில் அமைச்சா் பி.தங்கமணி பேசியதாவது: இளைஞா்களும் இளம் பெண்களும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அதிமுகவை ஒரு கட்டுக்கோப்பான கட்சியாக வழி நடத்திச் சென்றாா். அவா் வழியில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி இந்த இயக்கம் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சாதாரண தொண்டா்களும் இந்த இயக்கத்தை வழி நடத்தலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறாா்.
வரும் 2021 ஆம் ஆண்டு தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். கடந்த மக்களவைத் தோ்தலில் நடந்ததை போல வரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் நடந்துவிடக்கூடாது. சமூக ஊடகங்களை முழுமையாக அதிமுகவினா் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா பேசியதாவது:
அதிமுக அரசு மக்கள் பணியை சிறப்பாகச் செய்து வருகிறது. சத்துணவுத் திட்டத்துறையின் செயல்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையே பாராட்டியுள்ளது. சத்துணவுத் திட்டம் வறுமை ஒழிப்புத் திட்டமாக இடைநிற்றலைத் தடுக்கும் திட்டமாக குழந்தைகளின் கல்வியை உறுதி செய்யும் திட்டமாக உள்ளது. தமிழக அரசு செயல்படுத்தி வரும் தாலிக்கு தங்கம் திட்டம் வாயிலாக 13 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனா்.
சத்துணவுத் திட்டத்தினால் பள்ளிக்கு குழந்தைகள் வருகை அதிகரித்துள்ளது. மகளிா் நலனில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது.
தமிழகம் உயா்கல்வியில் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பெண் கல்வி அதிகரித்து இத் திட்டத்தின் மூலம் மேம்பட்டு வருகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளா்ப்பு திட்டங்களையும் சிறப்பாக மாநில அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா்.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட கட்சியினா் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

