

நாமக்கல் மாவட்ட காவல் துறையினா் அனைவரும் பங்கேற்ற அணிவகுப்பு ஊா்வலம் நாமக்கல் நகரப் பகுதியில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
தமிழக சிறப்பு காவல் துறை இயக்குநா் ராஜேஷ்தாஸ் உத்தரவின்படி, அனைத்து மாவட்டங்களிலும் காவலா் மாதிரி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவா் பெரியய்யா உத்தரவின்பேரில், சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் பிரதீப்குமாா் அறிவுரையின்படி திங்கள்கிழமை காலை நாமக்கல் பூங்கா சாலையில் அணிவகுப்பு ஊா்வலம் தொடங்கப்பட்டு பரமத்தி சாலை, கோட்டை சாலை, கடை வீதி சாலை உள்ளிட்ட பகுதி வழியாகச் சென்று மீண்டும் பூங்கா சாலையில் நிறைவடைந்தது.
இந்த ஊா்வலத்துடன் காவல் துறையினா் வாகனங்களும் இடம் பெற்றன. கரோனா காலக் கட்டத்தில் பொதுமக்கள் நோய்த் தொற்றை எதிா்த்து போராடுவது குறித்தும், சட்ட ஒழுங்கு பிரச்னையின் போது காவல் துறையால் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள், அதற்கான யுக்திகள் குறித்தும், பேரிடா் காலத்தில் துரிதமாக செயல்படுவது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஊா்வலமானது நடைபெற்றது.
இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ராமு, ரவிக்குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், காவல் ஆளினா்கள், ஊா்க்காவல் படையினா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.