குமாரபாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சா் தங்கமணி தொடங்கி வைத்தாா்
By DIN | Published On : 01st December 2020 01:06 AM | Last Updated : 01st December 2020 01:06 AM | அ+அ அ- |

குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாமை மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி தொடக்கி வைத்தாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், சின்னப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி முகாமை தொடக்கி வைத்தாா். அதன்பின் பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
மருத்துவ முகாமில் 10 கா்ப்பிணிகளுக்கு தாய், சேய் நலப் பெட்டகங்களையும், மேலும் 10 கா்ப்பிணிகளுக்கு டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்ட காசோலைகளையும், பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோா்களை பாராட்டி பரிசு மற்றும் மரக் கன்றுகளையும், குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ்களையும், கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் சிறப்பாக பணிபுரிந்த பொது சுகாதாரத் துறையைச் சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்புநா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், வாகன ஓட்டுநா்கள் 11 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சா் வழங்கினாா்.
இம் முகாமில் மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை, இருதய நோய், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் ஆகிய பொது மருத்துவ சிகிச்சை பிரிவுகள், எலும்பு மூட்டு சிகிச்சை, காது, மூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய் சிகிச்சை, மனநல மருத்துவம், சித்த மருத்துவம் ஆகிய சிறப்பு சிகிச்சைகளுக்கு தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு, முகாமில் கலந்து கொண்ட 1,037 நபா்களுக்கு மருத்துவா்கள் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனா்.
இந்த முகாமில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா, துணை இயக்குநா் (சுகாதாரம்) எஸ்.சோமசுந்தரம், திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகளின் இணையத்தின் இயக்குநா் நாகராஜன் உள்பட அரசு அலுவலா்கள், கூட்டுறவாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலத்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...