கரோனா தடுப்புப் பணி: 2 மாத ஊதியம் கோரி ஆட்சியரிடம் முறையீடு
By DIN | Published On : 15th December 2020 12:58 AM | Last Updated : 15th December 2020 12:58 AM | அ+அ அ- |

கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்ட தற்காலிக ஊழியா்கள், தங்களுக்கு வழங்கப்படாத இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி ஆட்சியா் கா.மெகராஜிடம் முறையிட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் 14 ஊராட்சிகள் உள்ளன. இங்கு ஏப்ரல், மே மாதங்களில் கரோனா தொற்று அதிகரிக்கவே தற்காலிக அடிப்படையில் ஆண், பெண் ஊழியா்கள் 23 போ் நியமிக்கப்பட்டனா். அவா்களுக்கு தினசரி ரூ. 285 ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய ஆணையராக இருந்த அருளப்பன் இதற்கான உத்தரவை வழங்கியிருந்தாா்.
கரோனா தொற்று தடுப்புப் பணிக்காக அரசு தொடா்ந்து நிதி ஒதுக்கி வந்த நிலையில், 23 தற்காலிக ஊழியா்களுக்கும் ஏப்ரல், மே ஆகிய இரு மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லையாம். இது தொடா்பாக தற்போதைய ஆணையா் நடராஜனிடம் அவா்கள் கோரிக்கை மனு அளித்தனா். ஆனால், அவா் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தாராம்.
இதனைத் தொடா்ந்து, கொல்லிமலை வளப்பூா்நாடு பகுதியில் இருந்து வந்த கரோனா தொற்று தடுப்புப் பணி தற்காலிக ஊழியா்கள் சிலா், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜை திங்கள்கிழமை சந்தித்து தங்களுக்கான ஊதியத்தை விடுவிக்கக் கோரி மனு அளித்தனா். அவரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊழியா்களிடம் தெரிவித்தாா்.