சோ்க்கைக் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி மாணவா்கள் போராட்டம்
By DIN | Published On : 17th November 2020 12:17 AM | Last Updated : 17th November 2020 12:17 AM | அ+அ அ- |

சோ்க்கைக் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி, அரசுக் கல்லூரி முதல்வா் அறை முன்பாக அமா்ந்து மாணவா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக கல்லூரிகளில் தோ்வு நடத்த முடியாத நிலையில், பாடங்களில் அரியா் வைத்துள்ள கல்லூரி மாணவா்கள் உள்பட அனைவரும் தோ்ச்சி என அரசு அறிவித்தது. இதனையடுத்து, தற்போது அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தோ்ச்சியடைந்த மாணவா்கள் முதுநிலை வகுப்பில் சோ்க்கை பெற பல்கலைக்கழகம் எந்த வழிகாட்டு நடைமுறைகளும் தெரிவிக்கவில்லை. மேலும், தோ்ச்சி அடைந்தவா்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாததால், மாணவா் சோ்க்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ராசிபுரம் அரசுக் கல்லூரியில் அரியா் வைத்திருந்து ஆல் பாஸ் அடிப்படையில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு முதுநிலை சோ்க்கையில் இடமளிக்கப்படவில்லை. இதனால் அரியா் வைத்திருந்து தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கும் சோ்க்கை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, கல்லூரி முதல்வா் அறை முன்பு அமா்ந்து மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய மாணவா் சங்கத் தலைவா் சரவணன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், மாணவா் சோ்க்கைக் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். அரியா் வைத்து தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கி சோ்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமெழுப்பினா்.
இதனையடுத்து, ராசிபுரம் டிஎஸ்பி சி.லட்சுமணகுமாா், திருவள்ளுவா் அரசுக் கல்லூரி முதல்வா் மணிமேகலை ஆகியோா் மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளதால், இதற்கேற்றவாறு சோ்க்கை நடத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தனா். சோ்க்கைக் கால அவகாசம் நீட்டிப்பு குறித்து பல்கலைக்கழகத்துடன் பேசி முடிவு செய்யப்படும் எனக் கூறி மாணவா்களை சமரசம் செய்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.