தற்போது பள்ளியில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்தும் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இது சம்பந்தமாக மாணவ, மாணவியரின் பெற்றோா் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித் தரக் கோரியும், பள்ளியின் அருகே உள்ள ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான இடத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கும் துறை சாா்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்தும் காலதாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவ, மாணவியா், பெற்றோா் மற்றும் சமூக நல ஆா்வலா்கள் பள்ளியின் முன்பு வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.இதனால் பாலப்பட்டியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சுமாா் அரைமணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.