ராசிபுரத்தின் முதல் பெண் நகர்மன்றத் தலைவர் யார்?

ராசிபுரம் நகர்மன்றத்திற்கான உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிகம் கைப்பற்றியுள்ள நிலையில், நாற்காலியை அலங்கரிக்கப்போகும்  முதல் பெண் யார் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
ராசிபுரம் நகராட்சி முகப்பு படம்
ராசிபுரம் நகராட்சி முகப்பு படம்
Published on
Updated on
2 min read

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர்மன்றத்திற்கான உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிகம் கைப்பற்றியுள்ள நிலையில், பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ள இந்த நகர்மன்றத்தின் தலைவர் யார் என கட்சி முடிவு செய்திருந்தாலும், இந்த நாற்காலியை அலங்கரிக்கப்போகும்  முதல் பெண் யார் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகள் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் சேலம் நகராட்சிக்கு அடுத்து 1948 ஆண்டு உதயமான ராசிபுரம் நகராட்சி 27 வார்டுகள் கொண்ட பழமையான நகராட்சியாகும்.

இதுவரை நகர்மன்ற தலைவர்களாக இருந்தவர்கள்: 1949 - 52 வரை சி.பி.கண்ணையா நாயுடு, 1952 – 53 வரை ஒரு வருட காலம் வேலா செட்டியார், 1959 – 62 வரை எம்.எஸ்.ஏ.ஜெயராமன், 1962 – 64 வரை  ஏ.சுப்பிரமணியம், 1964 – 69 வரை ஆர்.பெரியண்ண கவுண்டர், 1969 – 75 வரை கே.சி.பெரியசாமி, 1986 – 91 வரை எம்.எஸ்.எஸ்.ரத்தினம், 1996 – 2001 வரை டி.கணேசன், 2001 – 06 வரை ஆர்.வி.மகாலிங்கம், 2006 – 11 வரை என்.ஆர்.ராமதாஸ், 2011 – 16 வரை எம்.பாலசுப்ரமணியன் ஆகியோர் பதவி வகித்துள்ளனர்

தற்போது நகராட்சி வார்டு மறுசீரமைப்புக்கு பின் கட்சியினர் சந்தித்த முதல் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

மறு சீரமைப்பின்படி, பழைய வார்டு எண்கள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இதன்படி மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 14 வார்டுகள் பெண்களுக்கும், 13 வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டன.  இதில் தனி வார்டுகள், பொது வார்டுகள் அடங்கும். முதல் முறையாக ராசிபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு இத்தேர்தலில் பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது முதல்முறையாக பெண் நகர்மன்றத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
 
இந்நகராட்சியில் 19,670 ஆண்கள், 21,246 பெண்கள், 1 திருநங்கை என மொத்தம் 40,917 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.   27 வார்டுகளிலும் சேர்ந்து இந்த முறை 145 பேர் தேர்தலில் களம் கண்டனர். ராசிபுரம் நகரில் குருகிய சாலைகளால் போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்சனை, சுகாதார பிரச்சனை போன்றவையே பிரதானம் இருந்து வந்தது. இதனை முன் நிறுத்தி வேட்பாளர்கள் களத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான  தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 75.59 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கை பிப். 22-ல் நடந்து முடிந்த நிலையில்,  வாக்கு எண்ணிக்கை முடிவில் ராசிபுரம் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சியினர் 24 வார்டுகளை கைப்பற்றியுள்ளனர்.  இந்நிலையில் நகர்மன்றத்திற்கு தேர்வாகும் முதல் பெண் நகர்மன்றத் தலைவர் யார் என்பதற்கான தேர்வில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

நடந்து முடிந்த நகர்மன்ற உறுப்பினருக்கான தேர்தலில் திமுக - அதிமுக கட்சியினரிடையே கடும் போட்டிய நிலவியது. இதில் 27 வார்டுகளில் ஆளும் கட்சியான திமுக கூடுதல் இடங்களை கைப்பற்றும், அதிமுக சுமார் 8 வார்டுகளில் வசப்படுத்திக்கொள்ளும் என கணிக்கப்பட்டது.

மேலும் இழுப்பறியான சூழல் ஏற்பட்டால், ஆளும் கட்சியினர் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் ஆதரவு திரட்டுவதில் தீவிர கவனம் செலுத்துவர் என கூறப்பட்டது. ஆனால் தற்போது பெரும்பான்மை வார்டுகளில் திமுகவினர் தேர்வாகியுள்ளதால், தலைவர் ஏகமனதாக தேர்வு செய்யப்படவுள்ளார் என்பது திமுகவினரிடையே நிம்மதியை ஏற்பட்டுத்தியுள்ளது.

தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படும்  கவிதாசங்கர்

இத்தேர்தலில் திமுக சார்பில் 15-வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ராசிபுரம் நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர் மனைவி முனைவர் கவிதா நகர்மன்றத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

முனைவர் கவிதா சங்கர்
முனைவர் கவிதா சங்கர்

நகர்மன்றத்துக்கு திமுக கூட்டணி கட்சியினர் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், கவிதா சங்கர் நகர்மன்றத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுவது உறுதியானதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து நடைபெறும் துணைத் தலைவருக்கான தேர்வில் திமுக கட்சியிலேயே பலர் விரும்பினாலும், கட்சியின் தலைமை அறிவிக்கும் உறுப்பினருக்கு வாய்ப்பு அமையும் என தெரிகிறது.

அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படுத்திய புதைக்குழி சாக்கடை திட்டம்

ராசிபுரம் நகரில்  போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்சனை, சுகாதார பிரச்சனை போன்றவையே பிரதானம் இருந்து வந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் புதைக்குழி சாக்கடை திட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், நகரின் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாகவே காணப்பட்டது.

இந்த சாலைகளின் போக்குவரத்தில் மக்கள் பல ஆண்டுகள் துயரத்துக்கு ஆளாகினர். மேலும் புதைக்குழிசாக்கடை திட்டப்பணிகள்  முடிவடைந்தும், நிதி ஒதுக்காததால், குண்டும் குழியுமான சாலைகளே இன்றளவும் இருந்து வருகிறது. இந்த பிரதான பிரச்சனையே தற்போதைய தேர்தலில் திமுக அரிதி பெரும்பான்மை பலத்துடன் வெல்ல காரணம் என பொதுமக்கள் கருத்தாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com