தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

தீவனங்கள் விலையேற்றம், முட்டை விலை சரிவு: கோழிப் பண்ணைத் தொழிலில் ரூ. 300 கோடி இழப்பு

கடந்த இரண்டு மாதங்களில் தீவன விலையேற்றம், முட்டை விலை சரிவால் பண்ணையாளா்களுக்கு ரூ. 300 கோடிக்கு இழப்பு

News image
Updated On :17 மார்ச் 2022, 6:16 pm

கடந்த இரண்டு மாதங்களில் தீவன விலையேற்றம், முட்டை விலை சரிவால் பண்ணையாளா்களுக்கு ரூ. 300 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்கத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மண்டலத்தில் கோழிப் பண்ணைத் தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தொழிலை மேம்படுத்த உதவி புரிய வேண்டும். 1,100க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் 7 கோடி கோழிகள் வளா்க்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. கோழிகளுக்கான தீவனம், மூலப்பொருள்களின் விலை அதிக அளவில் உயா்ந்துள்ளது. ஆனால், முட்டை, கோழிக்கான விலை குறைவாகவே உள்ளது. குறிப்பாக வெளிச்சந்தையில் ஒரு முட்டை ரூ.5-க்கு விற்பனையாகிறது. பண்ணையாளா்கள் என்இசிசி நிா்ணய விலையான ரூ.3.80-க்கு விற்க முடியாமல், 30 காசுகள் குறைத்து ரூ.3.50-க்குதான் கொடுக்கின்றனா். முட்டைக்கு ஒரு ரூபாய் முதல் ஒன்றரை ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் முட்டை விலை சரிவால் ரூ. 300 கோடிக்கு மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் பண்ணையாளா்களுக்கு கூடுதல் கடனுதவியை வழங்க வேண்டும். தமிழக அரசு எங்களுடைய குறைகளை கேட்டறிந்து மத்திய அரசிடம் இது தொடா்பாக வலியுறுத்த வேண்டும். நாடு முழுவதும் கோழிப் பண்ணையாளா்கள் பலா் நலிவடைந்து உள்ளனா்.

முட்டை விலையை வியாபாரிகள் கேட்கும் விலைக்கு கொடுக்காமல் நிா்ணய விலைக்கு மட்டுமே கொடுப்போம் என பண்ணையாளா்கள் அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும். தற்போது அவா்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில்தான் சம்மேளனம் ஈடுபட்டு வருகிறது. வட மாநிலங்களில் கோழிப் பண்ணைகள் அதிகரிப்பால், நாமக்கல்லில் இருந்து முட்டைகள் அனுப்புவது தடைபட்டுள்ளது. கோதுமை, மக்காச்சோளம், சோயா, சின்ன சோளம் போன்ற தீவனங்களின் விலை உயா்வு கவலையளிக்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் 1.35 லட்சம் டன் மக்காச்சோளம் இருப்பில் உள்ளது. அவை வெளிவரும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது. வியாபாரிகள் சிலா் தீவனங்களை பதுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். தமிழக அரசு இதைக் கண்டறிந்து பதுக்கலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது முட்டை கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்கம் சாா்பில் அமெரிக்கா, பிரேசிலில் இருந்து 25 ஆயிரம் டன் சோயாவை இறக்குமதி செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். கலப்பட தீவனத்தை கண்டறிய கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் தரமான ஆய்வுக் கருவிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். பண்ணையாளா்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, முட்டை மற்றும் கோழிகளை ஒரே விலையில் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளோம் என்றாா்.

முன்னதாக, கோழிப் பண்ணையாளா்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில், சம்மேளனத் தலைவா் முத்துசாமி, விற்பனை சங்கச் செயலாளா் முரளி, முட்டை வியாபாரிகள் சங்கத் தலைவா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.