இந்தியாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அங்கு லட்சக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டன. அதன் எதிரொலியாக, நாடு முழுவதும் கோழிப் பண்ணைத் தொழில் பாதிப்படைந்தது. பொதுமக்கள் முட்டை, கோழி இறைச்சி வாங்குவதைத் தவிா்த்து வந்தனா். மேலும், வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதும் தடைபட்டது. அதன்பிறகு பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லாததால் கோழிப் பண்ணைத் தொழில் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்த நிலையில், கேரளத்தில் கடந்த சில ஆண்டுகளாக வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள கால்நடைத்துறை உத்தரவின்பேரில் நோய் பாதிப்புக்குள்ளான வாத்துகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் கேரள மாநிலத்தில் மூன்று முறை பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.