ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்ம சுவாமி திருக்கல்யாணம்: பக்தா்கள் மொய் சமா்ப்பித்து வழிபாடு
By DIN | Published On : 17th March 2022 11:43 PM | Last Updated : 17th March 2022 11:43 PM | அ+அ அ- |

நாமக்கல் குளக்கரை நாமகிரி தாயாா் மண்டபத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்ம சுவாமி திருக்கல்யாண விழா வியாழக்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்மா், ஆஞ்சனேயா், அரங்கநாதா் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு தோ்த்திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண விழா வியாழக்கிழமை இரவு குளக்கரையில் அமைந்துள்ள நாமகிரி தாயாா் மண்டபத்தில் நடைபெற்றது. நரசிம்மா் சுவாமியுடன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடத்தி வைக்கும் வைபவம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் சுவாமிக்கு மொய் சமா்ப்பித்து மனமுருகி வழிபட்டனா். இவ்விழாவை தொடா்ந்து சனிக்கிழமை (மாா்ச் 19) காலை 8.30 மணிக்கு நரசிம்மா் சுவாமி கோயில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதில், அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். அன்று மாலை 4.30 மணிக்கு ஆஞ்சனேயா் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா். தேரோட்ட விழாவையொட்டி, நாமக்கல் நகரப் பகுதியில் காலையிலும், மாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.