நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள முக்கிய வைணவத் தலங்களில் நாமக்கல்லும் ஒன்று. இங்குள்ள மலையில், குடைவறை கோயிலாக நரசிம்ம சுவாமி, நாமகிரி தாயார் சன்னதி உள்ளது. இதன்  உபக்கோயிலான, ஆஞ்சனேயர் கோயிலில், சுவாமி 18 அடி உயரத்தில், நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது 2009-ஆம் ஆண்டு நடைபெற்றது.

அதன்பிறகு 14 ஆண்டுகள் கழித்து, கடந்த மார்ச் மாதம் அறநிலையத் துறை, தனியார் பங்களிப்புடன், ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கோயில் திருப்பணிகளானது தொடங்கியது. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, திங்கள்கிழமை மாலை 6 மணி அளவில், நரசிம்மர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில், சிறப்பு பூஜைகளுடன் நன்னீராட்டு பெருவிழா தொடங்கின.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த 25-க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள், முதல் கால யாகபூஜையையும், ஆச்சார்ய அழைப்பு, இறைவனிடம் அனுமதி பெறுதல், கலச பூஜை, தமிழ் திவ்ய பிரபந்தம் உள்ளிட்டவற்றையும் நடத்தினர். இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை, காலை முதல் இரவு வரையில், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால யாகபூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

அன்று இரவு 8 மணி அளவில், ஆஞ்சனேய சுவாமிக்கு நல்லெண்ணெய், சீயக்காய் தூள், பஞ்சாமிர்தம், பால் மற்றும் புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. புதன்கிழமை காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்குட நன்னீராட்டு பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில், தமிழக வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் பெ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் ச.உமா, கோயில் அறங்காவலர் குழு தலைவர் கா.நல்லுசாமி, அறங்காவலர்கள் ம.மல்லிகா குழந்தைவேல், இராம. ஸ்ரீனிவாசன், சௌ. செல்வசீராளன், எம்.ஜி.எஸ்.ரமேஷ்பாபு, அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் இரா. இளையராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில், நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சனேயரை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு, மஞ்சள், குங்குமம், செந்தூரம், தீர்த்தம் அடங்கிய புட்டி, பூந்தி, சுவாமி திருவுருவப்படம், கைப்பை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

பக்தர்கள் நெரிசலை தவிர்க்கவும், சிரமமின்றி வழிபாடு செய்யவும், சேலம், நாமக்கல், தருமபுரி கோவை  மாவட்டத்திலிருந்து வந்திருந்த 800-க்கும் மேற்பட்ட போலீஸார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் தலைமையில் கோயில் வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

நன்னீராட்டு பெருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆஞ்சனேயர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, நாமக்கல் தாலுக்கா அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நகரப் பகுதிகளில் கனரக வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், பேருந்து மற்றும் இதர வாகனங்கள் செல்ல போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com