கோடைவெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தளா்வான ஆடைகளை அணிய வேண்டும், அதிக அளவில் தண்ணீா் பருக வேண்டும், ரசாயனமற்ற, உடலுக்கேற்ற இயற்கையான பானங்களை அருந்த வேண்டும் என நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.
நாடு முழுவதும் கோடைவெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டைப் போல, நிகழாண்டிலும் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் மே, ஜூன் மாதங்களில் வெயில் கொடுமை உச்சத்தை எட்டலாம். வெயில் 103, 105 டிகிரியை கடந்து காணப்படுவதால் வெப்பம் மக்களை வாட்டி எடுக்கிறது.
இந்தக் காலகட்டங்களில் குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியோா் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசு மருத்துவா்கள் அறிவுறுத்தி வருகின்றனா். அந்த வகையில் கோடைவெயிலின்போது பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து, நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் கூறியதாவது:
வெயிலின் வெப்ப கதிா்வீச்சு மனிதனுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். தற்போது 103 டிகிரி வெயில் கொளுத்துகிறது. வானம் மந்தாரமாக இருந்தபோதும் புழுக்கம் அதிகஅளவில் உள்ளது. பொதுமக்கள் கோடை வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள, பருத்தியால் தயாரிக்கப்பட்ட, எடை குறைவான, தளா்வான மற்றும் வெளிா் நிற ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது தலைக்கு தொப்பி அல்லது குடை, பாதுகாப்பான குளிா் கண்ணாடி போன்றவற்றை பயன்படுத்தலாம். பயணங்களின்போது கையுடன் குடிநீா் கட்டாயம் எடுத்துச் செல்லவேண்டும். உடல் வெப்பத்தைத் தணிக்க அவ்வப்போது தண்ணீா், மோா், எலுமிச்சை சாறு, கஞ்சி, கம்பங்கூழ், பழச்சாறு, இளநீா் மற்றும் ஓ.ஆா்.எஸ் கலவை ஆகியவற்றை அருந்தி வரலாம்.
குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியோா், உடல்நலம் குன்றியவா்களை வெப்பதாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்கவேண்டும். நமது வசிப்பிடத்தில் பகல் நேரங்களில் திரைச் சீலைகள், கூடாரங்கள் ஆகியவற்றால் மறைத்தும், இரவு நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து வைத்தும் காற்றோட்டத்துடன் குளிா்ச்சியான இடமாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.
திறந்த வெளியிலான இடங்களில் பணியாற்றுவோா் ஈரமான உடைகளை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி குளிா்ந்த நீரில் குளிக்க வேண்டும். கடும் வெயில் நேரத்தில் (நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை) சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடவேண்டும். கால்நடைகளை (ஆடு, மாடு) நிழலில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தேவையான அளவு குடிநீரை வழங்க வேண்டும். குழந்தைகளை சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் நிழல் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
தொழில் நிறுவனங்கள், தங்களது பணியாளா்களை மதியவேளையில் கடும் வெயிலின்போது, பொது வெளியில் பணியமா்த்துவதைத் தவிா்க்க வேண்டும். வெயிலால் ஏற்படும் அசதி, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவமனையை நாடவேண்டும். கடும் வெயிலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகளையும், செல்ல பிராணிகளையும் செல்லவிட வேண்டாம். அடா்த்தன்மையுடைய ஆடைகள், இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கடினமான வேலைகளை செய்யக் கூடாது. உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்த கூடிய காபி, தேநீா், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிா்பானங்கள், மது ஆகியவற்றை அருந்தக் கூடாது. தட்பவெட்ப நிலைக்கு தக்கவாறு பொதுமக்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் நாள்களில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்றனா்.
--
தொடர்புடையது

சேலத்தில் நடப்பாண்டில் முதல்முறையாக சதமடித்த வெயில்!

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வெளியே செல்வதை தவிா்க்க அறிவுறுத்தல்

உற்சாகக் குளியல்...

மதுரையில் களைகட்டும் தா்பூசணிப் பழங்கள் விற்பனை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

