

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராசிபுரம் நகரில் வியாழக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இதனால் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு அறிவித்துள்ள இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள பேருந்து நிலையத்தில் போதிய இட வசதி இல்லாத காரணத்தினாலும், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காரணத்தினாலும், பேருந்து நிலையம் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற அண்மையில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது.
நகரில் பல்வேறு சங்கத்தினரிடம் கருத்தும் கேட்கப்பட்டது. இதில் தற்போதைய பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அணைப்பாளையம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கும் வகையில் அப்பகுதியில் தனியாரிடம் 7 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 7 கி.மீ.தொலைவில் உள்ள அணைப்பாளையம் பகுதிக்கு பேருந்து நிலையம் மாற்றம் செய்வதற்கு ராசிபுரம் மக்கள் நலக்குழு உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரும், அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிலையத்தை 3 கி.மீ. தொலைவிற்குள் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும், சிலர் சாலைகளை விரிவாக்கம் செய்து, புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினாலே தற்போதைய பேருந்து நிலையம் போதுமானது, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
பேருந்து நிலைய மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல்வேறு அமைப்பினரும் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடத்தி, கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திட முடிவு செய்தனர். இதனையடுத்து அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் கடையடைப்பு நடத்த ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை நேரில் வினியோகம் செய்திருந்தனர்.
பெரும்பாலான கடைகள் அடைப்பு:
இதனையடுத்து பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு அறிவிப்பின்படி வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
நகரில் பேருந்து நிலையம் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் ஒரு சில டீக்கடைகள், மருந்து கடைகள் தவிர மளிகை கடைகள், உணவு விடுதிகள், பேக்கரி கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் நகரில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.