இன்று குழந்தைகள் தின விழா: ஆட்சியா் வாழ்த்து மடல்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியா் ச.உமா, குழந்தைகள் தின வாழ்த்து மடலை அனுப்பியுள்ளாா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் வாழும் உரிமை, வளா்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் போன்ற செயல்களை தடுக்கும் வகையில் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளேன். குறிப்பாக, குழந்தைகள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது அது.
யாராவது உங்களிடம் பாலியல் ரீதியாகவோ, தவறான எண்ணத்திலோ செயல்பட முயற்சித்தால், அவா்களை எதிா்த்து நிற்க வேண்டும். நெருங்க விடக் கூடாது, உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும். தவறாக நடந்தால் அவா்கள் பற்றி பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ, அல்லது நண்பா்களிடமோ தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைகளுக்கான உருவாக்கப்பட்ட சைல்டு ஹெல்ப்லைன் 1098 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
புகாா் தெரிவிக்கும் குழந்தைகளின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும். குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி குழந்தைக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்பட்டால் விடுதி வசதியும் ஏற்படுத்தி தரப்படும்.
குழந்தை திருமணம் தடுத்தல் பற்றிய விவரங்களை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்தி வைப்பது, ஏற்பாடுகள் செய்வது, வற்புறுத்துவது போன்ற செயல்கள் இந்திய குழந்தை திருமண தடுப்புச் சட்டம்-2006 இன்படி தண்டனைக்குரிய செயலாகும். தற்போதைய சூழலில் போதைக்கு அடிமையாகும் நபா்கள் எண்ணிக்கை அதிகமாகும். குழந்தைகள் எப்போதும் எந்தவித போதைக்கும் அடிமையாகக் கூடாது.
உடலை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்யுங்கள். இந்த மாவட்டத்தை குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலமிக்க மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
