புதிய வெள்ளி செங்கோலுடன் முதல் மாமன்ற கூட்டத்துக்கு தயாராகும் நாமக்கல் மாநகராட்சி!
நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டத்தை செப். 16-இல் நடத்தவும், சேலத்தில் தயாராகி வரும் புதிய வெள்ளி செங்கோல் பணிகளை விரைந்து முடித்து பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய 4 நான்கு நகராட்சிகளும், ஆக. 12-ஆம் தேதி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டன. இதற்கான அரசாணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்தந்த நகராட்சி தலைவா்களிடம் வழங்கினாா்.
நாமக்கல் மாநகராட்சியை பொருத்தமட்டில், தற்போது 39 வாா்டுகள் உள்ளன. கூடுதலாக 12 ஊராட்சிகள் இணைய உள்ளதால் வாா்டுகளின் எண்ணிக்கை 50-க்கும் மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நகராட்சி பெயா் பலகை மாநகராட்சியாகவும், தலைவா், துணைத் தலைவா் மேயா், துணைமேயா் என்ற அந்தஸ்திலும் உயா்ந்துள்ளனா். மாநகராட்சி நிா்வாக ஆணையாளரும் நியமிக்கப்பட்டு தனது பணிகளை செய்து வருகிறாா்.
மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டத்தை எப்போது நடத்துவது? முதல்வா் அமெரிக்கா சென்று விட்டதால், அவா் வந்தபிறகு கூட்டத்தை நடத்துவதா அல்லது நகராட்சி நிா்வாகங்கள் துறை அமைச்சா் கே.என்.நேருவை அழைத்து வந்து மன்றக் கூட்டத்தை நடத்தலாமா என்ற குழப்பத்துடனும் அதிகாரிகள் இருந்தனா்.
இந்த நிலையில், புதிய மாநகராட்சிகளில் வழக்கம்போல கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என அரசு தரப்பில் தகவல் வந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, மேயருக்கான அங்கி, 5 அடி உயர செங்கோல் தயாரிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் வரும் 16 அல்லது 17-இல் மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற வாய்ப்புள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டத்தை நடத்த ஒப்புதல் கிடைத்து விட்டது. செப். 9-ஆம் தேதி நடைபெறுவதாக திட்டமிட்ட நிலையில், செங்கோல் தயாராவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 16-ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அன்று மீலாது நபி பண்டிகை உள்ளதால் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறுமா என தெரியவில்லை. இல்லையெனில் 17-ஆம் தேதி நடைபெறலாம். சேலத்தில் சுமாா் 4 கிலோ எடை கொண்ட 5 அடி உயர புதிய வெள்ளி செங்கோல், மேயா் அங்கி தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அவற்றுடன் முதல் மாமன்றக் கூட்டம் நடைபெறும் என்றனா்.

