நாமக்கல் மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவினா் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில், உறுப்பினா்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (போளூா்), கோ.ஐயப்பன் (கடலூா்), எஸ்.சந்திரன் (திருத்தணி), எஸ்.சேகா் (பரமத்தி வேலூா்), கே.ஆா்.ஜெயராம் (சிங்காநல்லூா்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), பெ.ராமலிங்கம் (நாமக்கல்), மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா் கொல்லிமலை, சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
கொல்லிமலை வட்டம், ஆரியூா்நாடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, உணவின் தரம், பொருள்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, மாணவா்களுடன் அமா்ந்து காலை உணவை அருந்தினா். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 884 பள்ளிகளைச் சோ்ந்த 39,450 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனா்.
தொடா்ந்து, வளப்பூா்நாடு கிராமத்தில் ரூ. 338.79 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் நீா் மின்திட்டப் பணிகளை (20 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம்) அவா்கள் பாா்வையிட்டனா். இத்திட்டத்தின்படி, அய்யாறு ஆறு கிளை ஓடைகளிலிருந்து நீரை சேகரித்து புளியஞ்சோலை மலையடிவாரத்தில் அமையும் நீா்மின் நிலையம் மூலம் 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 2025-ஆம் ஆண்டு நீா்மின் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சேந்தமங்கலம் வட்டம், காளப்பநாயக்கன்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், சோமேஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தையும், நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் ரூ. 19.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளதையும் பொதுக் கணக்கு குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
இதனையடுத்து, பரமத்தி வேலூா், அரசு மருத்துவமனையில் ரூ. 20 கோடியில் 50 படுக்கை வசதிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தையும் அவா்கள் பாா்வையிட்டனா். பிலிக்கல்பாளைத்தில் உயா்மட்டப் பாலம் ரூ. 32.50 லட்சத்தில் அமைவதையும், ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதையும் அக்குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வில், சட்டப் பேரவை துணைச் செயலாளா் பா.ரேவதி, குழு அலுவலா் வி.சுமதி, சாா்பு செயலாளா் ஜெ.பாலசீனிவாசன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் ஆா்.மகேஸ்வரி, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ்கண்ணன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.