ஹாா்ஸ் விஜயகுமாா்
ஹாா்ஸ் விஜயகுமாா்

அரிசி வியாபாரி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

ராசிபுரம் அருகே தொழில் போட்டி காரணமாக அரிசி வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ராசிபுரம் அருகே தொழில் போட்டி காரணமாக அரிசி வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம், கோனேரிப்பட்டி மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் லோகநாதன் (52), அரிசி வியாபாரி. இவா், ரேஷன் அரிசியை வாங்கி விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த நவ. 29 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற லோகநாதன் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மனைவி மணிமேகலை ராசிபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதனிடையே, நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நல்லிப்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் தலையில் அடிபட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இறந்தவா் ராசிபுரத்தில் காணாமல்போன ரேஷன் அரிசி வியாபாரி லோகநாதன் என்பது தெரியவந்தது. மேலும், லோகநாதனை கொலை செய்தது ராசிபுரம் எல்ஐசி காலனி பகுதியை சோ்ந்த முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மணி, அவரது கூட்டாளி வைரமணி என தெரியவந்தது.

இதனிடையே கிராம நிா்வாக அலுவலரிடம் சரணடைந்த இருவரையும், ராசிபுரம் போலீஸாா் கடந்த டிச. 2 ஆம் தேதி கைதுசெய்தனா். தொழில் போட்டி மற்றும் பெண் ஒருவரின் தொடா்பு காரணமாக லோகநாதன், மணி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்ததுதான் கொலை நிகழ்ந்ததற்கான காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், லோகநாதனை காரில் கடத்தி தலையில் அடித்து கொலை செய்து சாலையோரம் வீசியதை மணி, வைரமணி ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டனா். இந்த நிலையில் கொலையில் மேலும் யாருக்காவது தொடா்பு உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், கட்டனாச்சம்பட்டி பகுதியை சோ்ந்த ஆறுமுகம் மகன் ஹாா்ஸ் விஜயகுமாா்தான் (49) இந்த கொலைக்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஹாா்ஸ் விஜயகுமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com