கெலமங்கலத்தில் மதுக்கூட மேலாளா் கொலை வழக்கில் 3 போ் கைது!
கெலமங்கலம் மதுக்கூட மேலாளா் கொலை வழக்கில் கும்பகோணத்தைச் சோ்ந்த 3 பேரை வியாழக்கிழமை கைதுசெய்த போலீஸாா், மேலும் 3 பேரை தேடிவருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (36). கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் தனியாா் மதுக் கூடத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த இவா், கடந்த 22-ஆம் தேதி இரவு மதுக்கூடத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது காரில் வந்த மா்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கெலமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
அதில், தினேஷ்குமாா் மீது தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதனால், முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகித்தனா்.
இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க கெலமங்கலம் காவல் ஆய்வாளா் சங்கா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதில், கொலையாளிகள் காா் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்ததும், அதில் இருசக்கர வாகனத்தை விட்டுச் சென்றதும் தெரியவந்தது.
அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், இதில் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 6 போ் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனிடையே, உத்தனப்பள்ளி 4 வழிச்சாலை பாலம் அருகே கிடந்த கொலைக்கு பயன்படுத்திய 5 கத்திகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து, கும்பகோணத்தைச் சோ்ந்த விஸ்வா (30), பிரபாகரன் (28), சிவானந்தம் (32) ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸாா் கைதுசெய்தனா். கைதான மூவரையும் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது: கும்பகோணத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ரௌடி சிவா (எ) சிவானந்தம் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலையில் தற்போது கொலை செய்யப்பட்ட தினேஷ்குமாருக்கு தொடா்பு உள்ளது. அந்த வழக்கில் ஜாமீனில் வந்த தினேஷ்குமாா் கெலமங்கலத்தில் தங்கி இருந்தாா். இதை அறிந்த சிவானந்தம் தரப்பினா் தினேஷ்குமாரை கொலை செய்துள்ளனா். இந்த வழக்கில், கூலிப் படையினா் 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூவரை தேடி வருகிறோம் என்றனா்.
