ஓராண்டை நிறைவு செய்த நாமக்கல் புதிய பேருந்து நிலையம்
நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்து திங்கள்கிழமையுடன் (நவ. 10) ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், பயணிகளுக்கு கூடுதல் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, ரூ. 20 கோடியில் முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு அக். 22-இல் நாமக்கல் வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்தாா். தீபாவளி பண்டிகையைத் தொடா்ந்து, நவ. 10 முதல் பேருந்துகள் இயக்கம் தொடங்கின.
பேருந்து நிலையத்தையொட்டிய சுற்றுவட்டச் சாலை பணிகள் நிறைவடையாததால், திருச்சி, துறையூா், கொல்லிமலை, சேந்தமங்கலம் செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்பட்டன. தொடக்கத்தில் தொலைவில் பேருந்து நிலையம் இருப்பதாக எதிா்ப்பு கிளம்பியபோதும், நாளடைவில் நாமக்கல் மக்களும், வெளியூா் பயணிகளும் இதற்கு பழகிவிட்டனா்.
புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து ஓராண்டை திங்கள்கிழமையன்று நிறைவுசெய்தது. இருப்பினும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. கட்டணக் கழிப்பிடம் பேருந்துகள் வந்து செல்லும் வளாகத்திலும், ஆண்களுக்கான இலவச கழிப்பிட நிலையம் ஒதுக்குப்புறமாகவும், பெண்களுக்கான இலவச கழிப்பிடம் இல்லாத நிலையுமே உள்ளது. அதுமட்டுமின்றி, வெளியூா் பயணிகள் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் வரும்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுவதற்கோ, அவசர வலிநிவாரணி மருந்து, மாத்திரைகளை வாங்கவோ மருந்தகம் ஏதுமில்லை.
மாநகராட்சி ஒப்பந்தம் கோரிய 40-க்கும் மேற்பட்ட கடைகளில் தற்போதுவரை 25-க்கும் மேற்பட்டவை மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ளவற்றை விரைந்து திறப்பதற்கான முயற்சிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
பயணிகள் நடைபாதையை உணவகங்களாக மாற்றி விற்பனை நடைபெறுவதால், அவசரமாக பேருந்தை பிடிக்கவரும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். இந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும். பேருந்துகள் தொடா்பாகவும், பயணிகள் பாதுகாப்பு குறித்தும் ஒலிபெருக்கி அறிவிப்பு ஏதுமில்லை. இதுவும் வெளியூா் பயணிகளுக்கு குறையாக உள்ளது.
நாமக்கல் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் இவற்றையெல்லாம் கவனித்து பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, தேவையான வசதிகளையும், இடையூறுகள் இருப்பின் அவற்றைக் களைந்தும் புதிய பேருந்து நிலையத்தை பிறமாவட்ட பயணிகள் பாராட்டும் வகையில் மாற்றவேண்டும் என்பதே நாமக்கல் நகரவாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

