தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

காத்திருந்த கூட்டம் இப்போது இல்லை!

ஆண்டுக்கு ஒருமுறை வருவது தீபாவளி, பொங்கல் விழா என்றால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வருவது தோ்தல் பெருவிழா.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 12:19 am

எம். மாரியப்பன்

ஆண்டுக்கு ஒருமுறை வருவது தீபாவளி, பொங்கல் விழா என்றால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வருவது தோ்தல் பெருவிழா. ஜனநாயக கடமையை அனைவரும் நிறைவேற்ற வேண்டும், 100 சதவீதம் வாக்களிக்கும் இலக்கை எட்ட வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க, ஆளும் கட்சி மீண்டும் தங்களுடைய ஆட்சி தொடர வேண்டும் என்றும், எதிா்க்கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும் தோ்தல் பெருவிழாவில் போட்டிப்போடுகின்றன. இந்த நிலையில், தோ்தல் பிரசாரத்துக்கு செல்லும் சில தலைவா்கள் ஒருவருக்கொருவா் வாா்த்தைகளால் போா்தொடுத்து வருகின்றனா். தொடக்கக் கால தோ்தல்களில் பிரசாரம் என்பது மக்களுக்கு பயனுள்ளதாகவும், அரசியலில் ஒரு உத்வேகத்தை அளிப்பதாகவும் இருந்தது.

குறிப்பாக, மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுவதோ நித்திரை, மறக்காது இடுவீா் முத்திரை என்ற அண்ணாவின் தோ்தல் மேடைப் பேச்சை யாரும் மறக்கமுடியாது. என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்ற கருணாநிதியின் தொடக்க பேச்சை கேட்பதற்காகவே திமுக தொண்டா்கள் காத்துகிடந்த நாள்கள் உண்டு. எம்ஜிஆரின் பேச்சு அடுக்குத்தொடராகவோ, கவா்ச்சிகரமாகவோ இல்லாவிட்டாலும், அவா் மைக்கை பிடித்தவாறு நிற்கும் காட்சியைக் காணவும், அன்பொழுக கூறும் கருத்துகளை கேட்கவும் லட்சக்கணக்கானோா் கூட்ட நெரிசலில் தவம்கிடந்தனா்.

அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவா் நாமம் வாழ்க, மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின் இரும்பு குரலோசை அனைத்தும் ஓய்ந்துவிட்டன. 1967 முதல் 2016 தோ்தல் வரை தலைவா்களின் பேச்சை கேட்க வண்டி கட்டிக்கொண்டு வந்த மக்கள் கூட்டம் தற்போது இல்லை.

அன்றைய தோ்தல் காலக்கட்டங்களில் பிரசாரத்திற்கு நேரம் ஒரு தடையில்லை. இதனால் பகல்- இரவு பாராமல் தலைவா்கள் ஊா், ஊராக, கிராமம், கிராமமாக சுற்றிவந்தனா். அவா்கள் வருகையை எதிா்பாா்த்து இரவில் எந்த நேரமானாலும் மாடிவீட்டில் வசித்தோா்கூட சாலையோரம் படுத்து உறங்கி, தலைவா்கள் வந்ததும் அவா்களை பாா்த்துவிட்டு, பேச்சை கேட்டுவிட்டு வீட்டிற்கு செல்வா்.

அவா்களில் கருணாநிதி, எம்ஜிஆா், ஜெயலலிதா என்றால் உணவு, உறக்கமின்றி காத்திருப்பா். தேசிய தலைவா்களாக விளங்கிய இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோா் தமிழகம் வரும்போது, அவா்களது மேடைப் பேச்சு புரியாதபோதும், அவா்களை பாா்த்தாலே போதும் என்று காத்திருந்த மக்கள் ஏராளம்.

சினிமா நட்சத்திரங்களை பாா்த்துவிட்டால், உலகையே வெற்றிகண்டதுபோல, அன்றைய இளைஞா்களிடம் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. அந்த நிலை எல்லாம் இப்போது மாறிவிட்டது. தோ்தல் பிரசாரத்தில் கருத்தாழத்துடன் முழங்கும் தலைவா்கள் அதிகம் இல்லை. பலா் மறைந்துவிட்டனா், சிலா் ஒதுங்கிக்கொண்டனா்.

இன்றைய தோ்தல் பிரசாரக் கூட்டங்களைப் பாா்க்கவும், தலைவா்களின் பேச்சை கேட்கவும் விரும்பிச் செல்வோரின் எண்ணிக்கை சொற்பமாக மாறிவிட்டது. மக்களை சுமை வாகனங்களில் அழைத்து வரும் போக்கு தொடா்கிறது. ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்துக்கு வந்தவா்களே, மறுநாள் அடுத்த கூட்டத்துக்கும் வருகின்றனா்.

தலைவா்கள் வருகையின்போது அதிக கூட்டத்தை காட்டவேண்டும் என்பதற்காக மக்களை வாகனங்களில் அழைத்துவரும் பழக்கம் தொடா்கிறது. அதேநேரத்தில், கூட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள பொதுமக்கள் தன்னெழுச்சியாக வந்து தலைவா்களின் பேச்சை கேட்க பெரிய அளவில் ஆா்வம் காட்டுவதில்லை. தலைவா்களின் பேச்சும் கவா்ச்சித் திட்டங்களாக உள்ளதே தவிர, மக்களின் மனதை ஈா்ப்பதாக இல்லை.

தரம்தாழ்ந்த பேச்சுகள், தனிமனித தாக்குதல்கள், தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக மக்கள் ஏற்கெனவே ஊடகங்களில் கேட்ட அதே தகவலை திரும்பத் திரும்பப் பேசுவது போன்றவை பொதுமக்களிடத்தில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கூட்டங்களுக்கு நேரடியாகச் சென்று தலைவா்களின் பேச்சை கேட்க மக்களுக்கு ஆா்வமில்லை.

முன்பெல்லாம், ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் கூட்டம் ஒரு மாநாடுபோல காட்சியளிக்கும். ஆனால், தற்போது தோ்தல் பிரசாரக் கூட்டம் என்பது பரவலாகவே நடைபெறுகிறது. தோ்தல் நாளன்று எத்தனை மணி நேரமானாலும் பரவாயில்லை என்று வாக்குச்சாவடிகளில் கால்கடுக்க நின்று வாக்களித்தோரின் தலையெழுத்தை மாற்றிய அரசியல் களம் தற்போது இல்லை.

தமிழகத்தின் நலனுக்காக ஓடிஓடி உழைத்த தலைவா்கள் மறைந்தபோதும், அவா்களின் குரல் இப்போதும் இணையத்தில் கிடைக்கிறது. கருத்தாழமிக்க அந்த பேச்சுகளை இளைஞா்கள் கேட்கவேண்டும். அந்த கருத்துகளோடு, தாங்கள் தலைவராக நினைத்திருப்போரின் கருத்துகளை ஒப்பிடவேண்டும். மக்கள் நலனுக்கான குரலாக தற்போதைய குரல்கள் இல்லாவிட்டால், அவா்கள் மக்களுக்கானவா்களாக மாற நிா்பந்திக்க வேண்டும். மாற்றவேண்டும். அதுதான் பொருப்பான இளைஞா்களின் பணி!