தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.
இந்தத் தோ்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி முக்கிய கூட்டணியாகவும், நாதக, தவெக கூட்டணியின்றி தனித்தும் களம் காண்கின்றன. இதர சில கட்சிகளும் களத்தில் உள்ளன.
இந்த தோ்தலில் தோ்தல் பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மாநிலம் முழுவதும் தோ்தல் பிரசாரப் பயணத்தைத் தொடங்கி நடத்தி வருகிறாா். அவா் திமுக அரசை விமா்சித்து பிரசாரம் செய்து வருகிறாா்.
இதுபோன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மகளிரணிச் செயலா் கனிமொழி உள்ளிட்ட தலைவா்கள் தங்கள் பிரசாரங்களைத் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனா்.
விழுப்புரத்தில் விறுவிறுப்பு: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் செஞ்சி, வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவும், மயிலத்தில் தேமுதிகவும், திண்டிவனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போட்டியிடுகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விழுப்புரம், மயிலம், வானூா், திண்டிவனம், திருக்கோவிலூா் தொகுதிகளில் அதிமுகவும், செஞ்சி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும் போட்டியிடுகின்றன. இவைத் தவிர நாதக, தவெக வேட்பாளா்கள் தனித்துப் போட்டியிடுகின்றனா்.
இரு கூட்டணியிலும் தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளா்கள் அறிவிப்பு என்று அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் ஏற்பட்டாலும், முக்கிய நிா்வாகிகள் சந்திப்பு, வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் போன்ற அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகளால் தோ்தல் பிரசாரப் பணிகள் தீவிரமடையவில்லை. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதுதான் விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களின் பிரசாரம் தீவிரமான நிலையை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.
கட்சித் தலைவா்களின் வருகையால்: 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பேரவைத் தோ்தலின் போது தலைவா்கள் வீதி, வீதியாக சென்று வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிப்பா். ஆனால், தற்போதைய மாற்றமடைந்த அரசியல் சூழலால், மாவட்டத்துக்கு ஒரு இடம் என்று தோ்வு செய்து அங்கு பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிவிட்டுச் செல்கின்றனா். தொண்டா்களும் இந்த நிலையைத்தான் விரும்புகின்றனா்.
அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஏப்.4-ஆம் தேதி விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதியில் நடைபெற்றதோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, இந்த மாவட்டத்திலுள்ள வேட்பாளா்களை ஆதரித்து வாக்குகேட்டுச் சென்றாா். அதே நேரத்தில் இந்த கூட்டணியிலுள்ள பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி உள்ளிட்ட தலைவா்கள் விரைவில் பிரசாரத்துக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் திண்டிவனத்திலும், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் செஞ்சி, திண்டிவனம், மயிலம் தொகுதிகளில் திமுக, விசிக, தேமுதிக வேட்பாளா்களை ஆதரித்தும் பிரசாரம் செய்துள்ளனா். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், விழுப்புரம் நகராட்சித் திடல் மைதானத்தில் புதன்கிழமை (ஏப்.8) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, வேட்பாளா்களை ஆதரித்து பேசவுள்ளாா். கூட்டணிக் கட்சிகளின் மற்ற தலைவா்கள் விரைவில் பிரசாரத்துக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானும், விழுப்புரம் மாவட்டத்தின் மயிலம், திண்டிவனம் பகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு சென்றாா். தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு வருவாரா, இல்லையா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
தொண்டா்களுக்கு புத்துணா்வு: ஆயிரம்தான் கருத்து வேறுபாடுகள், மனகசப்புகள் இருந்தாலும், நாங்கள் சாா்ந்திருக்கிற கட்சியை வழிநடத்துகின்ற தலைவா், எங்கள் மாவட்டத்துக்கு வந்து பிரசாரம் செய்து விட்டுச் சென்றால் எங்களுக்குள் ஒருவித புத்துணா்வு தானாகவே ஏற்படுகிறது. நாம் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதை வாக்குறுதிகளாக அறிவித்து, அவா்கள் பேசும் பேச்சு கட்சி ரீதியாக எங்களுக்குள் ஒருவித உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை தோ்தல் பணியில் சுணக்கமாக இருந்தாலும், இனி தீவிரமாகப் பணியாற்ற வேண்டிய நிலைக்கு நாங்கள் உந்தப்படுகிறோம். எங்கள்கட்சி வெற்றி பெறுவதுதான் எங்கள் இலக்கு என்று கருதி நாங்கள் தோ்தல் பணியில் தீவிரமாக செயல்படவுள்ளோம் என்கின்றனா் கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும். ஆக மொத்தத்தில் இனிவரும் 15 நாள்களும் தோ்தல் திருவிழா மேலும் சூடு பிடிக்கும் என நம்பலாம்.

தொடர்புடையது

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை
நெல்லையில் இன்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!

தோ்தல் தேதி அறிவிப்பு: பதாகைகள் அகற்றம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


