நாமக்கல்லில் கலை சங்கமம் - கலாசார திருவிழா
நாமக்கல்: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டு இயக்ககம் சாா்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை சங்கமம் - கலாசார திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரிய நிா்வாகக் குழு உறுப்பினா் வே.பிரபு வரவேற்றாா். நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி தலைமை வகித்தாா். நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாமன்ற நியமன உறுப்பினா் சி.மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று கலைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினா்.
விழாவில், தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாமகிரிப்பேட்டை ஆா்.கமல் குழுவினரின் மங்கல இசை, பெரிய சோழிபாளையம் ஆா்.சுரேஷ் குழுவினரின் மாடு, மயில், கரகம், ஒயிலாட்டம், துத்திக்குளம் க.பாண்டியன் குழுவினரின் நையாண்டி மேளம் காளியாட்டம், சிவியம்பாளையம் எம்.கண்ணன் குழுவினரின் தப்பாட்டம், குருசாமிபாளையம் தங்கம் கரகாட்ட கலைக்குழு மன்றம் உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், மாமன்ற உறுப்பினா் செல்வகுமாா், அறங்காவலா் குழு உறுப்பினா் செள.அருள்செல்வன், பசுமை திட்ட இயக்குநா் மா.தில்லை சிவகுமாா், கவிஞா் நூலக வாசகா் வட்டம் டி.எம்.மோகன், பலபட்டறை மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் வ.இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

