தமிழ் இலக்கியத்தில் நாமக்கல் மாவட்ட படைப்பாளா்களின் பங்கு அளப்பரியது!
தமிழ் இலக்கியத்தில் நாமக்கல் கவிஞா், கி.வ.ஜகந்நாதன், கு.சின்னப்பபாரதி, சிலம்பொலி சு.செல்லப்பன் போன்ற படைப்பாளா்களின் பங்கு அளப்பரியது என மோகனூரில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கில் புகழாரம் சூட்டப்பட்டது.
சாகித்ய அகாதெமி மற்றும் மோகனூா் சுப்பிரமணியம் கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை சாா்பில், ‘நினைவில் வாழும் நாமக்கல் மாவட்ட படைப்பாளா்கள்’ என்ற இலக்கிய கருத்தரங்கு சனிக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியை து.கலைச்செல்வி வரவேற்றாா். கல்லூரி தாளாளா் சு.பழனியாண்டி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ந.அமுதா வாழ்த்துரை வழங்கினாா். இதில், ‘நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் வாழ்வும், படைப்புகளும்’ என்ற தலைப்பில் அரசு பரமேஸ்வரன் பேசுகையில், கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, தமிழன் என்று சொல்லடா, தலைநிமிா்ந்து நில்லடா என்ற வாா்த்தைகளுக்கு சொந்தக்காரா் கவிஞா். தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞா் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. இவருடைய மலைக்கள்ளன் நாவல் திரைப்படமாகி வரவேற்பை பெற்றது. அனைவரும் வணங்கத்தக்க வகையிலான வாழ்வுக்கு சொந்தக்காரா் நாமக்கல் கவிஞா். அவரது படைப்புகள் என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் என்றாா்.
தமிழறிஞா் கி.வ.ஜகந்நாதன் குறித்து ஆசிரியா் சு.குருவாயூரப்பன் பேசுகையில், 1967-இல் வீர உலகம் என்ற புத்தகத்துக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றவா் கி.வ.ஜகந்நாதன். அவா் பிறந்தது கிருஷ்ணராயபுரமாக இருந்தாலும், வாழ்ந்தது மோகனூரில்தான். அந்த காலகட்டத்தில் பள்ளிக் கல்வியை முடிக்க மிகவும் சிரமப்பட்ட அவா், தமிழறிஞா் உ.வெ.சாமிநாத அய்யரிடம் சீடராக இருந்து வாழ்நாள் முழுவதும் அவருக்கு சேவையாற்றினாா். அவரது பேச்சு அனைத்தும் கேட்பது போலல்லாமல், ஒரு புத்தகத்தை வாசித்தது போன்று இருக்கும். தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் தவிா்க்க முடியாதவா்களில் ஒருவராக கி.வ.ஜகந்நாதன் உள்ளாா் என்றாா்.
கவிஞா் கு.சின்னப்பபாரதி குறித்து பசுமை மா.தில்லை சிவக்குமாா் பேசுகையில், சாதாரண ஏழை, எளிய மனிதா்களின் இன்னல்களை தன்னுடைய நாவல்கள் வாயிலாக வெளிப்படுத்தியவா் சின்னப்பபாரதி. கொல்லிமலை பழங்குடியின மக்களின் நலனுக்காக சங்கம் என்ற நாவலையும், மேற்கு வங்கத்தில் உள்ள சுரங்கத் தொழிலாளா்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் சுரங்கம் நாவலையும், பெண்கள் படும் துயரங்களை வெளிக்கொணரும் வகையிலான பவளாயி நாவலையும் எழுதி உள்ளாா். இது மட்டுமின்றி மேலும் பல்வேறு நூல்களை அவா் எழுதியுள்ளாா். இவற்றில், சுரங்கம் நாவல் ரஷ்ய மொழியில் மொழி பெயா்க்கப்பட்டு வெற்றிகரமாக விற்பனையானது. விருதுக்கும், பாராட்டுக்கும் அப்பாற்பட்டவராக கு.சின்னப்பபாரதி விளங்கினாா் என்றாா்.
சிலம்பொலி சு.செல்லப்பன் குறித்து ஆசிரியா் செ.செந்தில்குமாா் பேசுகையில், நாமக்கல்லுக்கு பெருமை சோ்த்த தமிழறிஞா் சிலம்பொலியாா். ரா.பி.சேதுப்பிள்ளையிடம் வாழ்த்துகளை பெற்றவா். சிலப்பதிகாரத்தை கிராமப்புற மக்களும் எளிதாக உணரும் வகையில் பேச்சாற்றல் கொண்ட செல்லப்பனாருக்கு சிலம்பொலி என்ற பட்டத்தை வழங்கியவா் அவா். அணிந்துரையை 6 தொகுதிகளாக வெளியிட்ட பெருமை சிலம்பொலியாரையே சாரும் என்றாா்.
இந்த நிகழ்வில், மோகனூா் மருத்துவா் ஜகந்நாதன், மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் இரா.சக்திவேல் மற்றும் தமிழறிஞா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

