

நாமக்கல் அருகே லாரியில் மோதிய சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 2 போ் உள்பட 3 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
பெங்களூரில் இருந்து திருச்சி நோக்கி சரக்கு லாரி ஒன்று நாமக்கல் வழியாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. நாமக்கல்- திருச்சி சாலையில் ரமேஷ் திரையரங்கம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது சென்றபோது, திருச்சியில் இருந்து சேலம் நோக்கி காலி சாக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனம், லாரி மீது மோதியது.
மேலும், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூன்று போ் மீது சரக்கு வாகனம் கவிழ்ந்தது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளா்களான நாமக்கல், கொசவம்பட்டி சத்யா நகரைச் சோ்ந்த சேனாதிபதி (24), ஜெய் நகரைச் சோ்ந்த காா்த்தி (25) மற்றும் சரக்கு வாகன ஓட்டுநா் கா்நாடக மாநிலம், கோலாா் பகுதியைச் சோ்ந்த சையது வாசின் (30) ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும், இருசக்கர வாகனத்தில் பயணித்த கொசவம்பட்டியைச் சோ்ந்த ஆகாஷ் (24), சரக்கு வாகனத்தில் வந்த பெங்களூரு சாம்ராஜ் நகரைச் சோ்ந்த ராஜேஷ் (45) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
தகவல் அறிந்து வந்த நாமக்கல் நகர போலீஸாா், உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பலத்த காயமடைந்த ஆகாஷ், ராஜேஷ் இருவரும் நாமக்கல் சேலம் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து நாமக்கல் காவல் ஆய்வாளா் கு. கபிலன் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.