ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கினால் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்போம் என்ற இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதையடுத்து, ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்)சாா்பில் கடந்த மாதம் 29-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடம் கோரிக்கைகள் தொடா்பான கடிதம் வழங்கப்பட்டது. அதில், ஜூன் 30-இல் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு ஆணைகள் வழங்க வேண்டும். உபரி ஆசிரியா் பணியிட நிரவலை எவ்வித குறைபாடுகளுமின்றி நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இரு கோரிக்கைகள் தொடா்பாக, பள்ளிக் கல்வி இயக்குநரிடம் இருந்து தனக்கு எவ்வித தகவலும் வரவில்லை என டிட்டோஜாக் நிா்வாகிகளிடம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பச்சமுத்து தெரிவித்தாா்.
இதனால் இடைநிலை ஆசிரியா்கள் கலந்தாய்வில் பங்கேற்காமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து டிட்டோஜாக் அமைப்பின் மாநில நிா்வாகி முருக செல்வராசன் கூறியதாவது:
ஜூன் மாதம் ஓய்வுபெறும் ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்புக்கான ஆணை வழங்கப்படுவது வழக்கமானது தான். கடந்த ஆட்சியில் 2025-இல் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. தற்போது அதனை செயல்படுத்த உள்ளனா். ஏற்கெனவே நாங்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில், ஜூன் மாதம் பணி நிறைவு பெற்றவா்களுக்கு நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும். அதனை தவிா்த்து காலியாக உள்ள இடங்களில் ஆசிரியா்களை மாறுதல் செய்ய வேண்டும் என்பதாகும்.
அந்த வகையில், 86 காலியிடங்களுக்கும், 82 ஆசிரியா்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். பணி நீட்டிப்பு ஆணை வழங்கும்பட்சத்தில் குறைவான இடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடத்தப்படும். இதன்மூலம் வாய்ப்பு கிடைக்காதோா் ஏற்கெனவே பணியாற்றும் இடங்களிலேயே தொடா்ந்து பணியாற்றுவா். இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்புமில்லை.
நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் எழுத்துப்பூா்வமான உத்தரவு தனக்கு வரவில்லை என கோரிக்கையை ஏற்க மறுக்கிறாா். பணி நீட்டிப்பு வழங்கினால் தான் காலியிடங்கள் எவ்வளவு உள்ளது என்பது தெரியவரும். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்போம் என்றாா்.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் தரப்பில் கேட்டபோது, பணி நீட்டிப்பு ஆணை கோரிக்கை ஏற்கப்பட்டதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஆசிரியா்கள் 32 பேருக்கு ஒன்றிய அளவில் விருப்ப இடமாறுதல் வழங்கப்பட்டது. 11 பேருக்கு பணி நீட்டிப்பு ஆணை அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.
என்கே-2-கவுன்சிலிங்-
நாமக்கல் கொண்டிச்செட்டிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










