நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ‘முதல்வா் மாநில இளைஞா் விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ‘முதல்வா் மாநில இளைஞா் விருது’ ஒவ்வோா் ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரையிலான 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ. 1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.
இவ்விருது பெற விண்ணப்பிக்க கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 2025 ஏப். 1 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 2026 மாா்ச் 31 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் (2025-2026) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்க வேண்டும்).
மேலும், சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். அவ்வாறு அவா்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
எனவே, தகுதிவாய்ந்த இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூா்த்திசெய்து ஜூலை 6-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியரகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







