இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள்: விரைவில் கொண்டாட்டம்!

நாமக்கல்லில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன். உடன், ஆட்சியா் எல்.மதுபாலன், எம்எல்ஏக்கள் சி.எஸ்.திலீப், பொ.சந்திரசேகரன். - dinamani online

Updated On :

நாமக்கல் மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், விரைவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்துடன் இருந்த நாமக்கல் 1997 ஜன. 1-ஆம் தேதி புதிய மாவட்டமாக உதயமானது. நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கோட்டங்களுடன் தொடங்கப்பட்ட இம்மாவட்டம் தற்போது 8 வட்டங்கள், ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சி, 15 ஒன்றியங்கள், 19 பேரூராட்சிகள், 310 கிராம ஊராட்சிகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்த மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள் நிறைவடைவதை விழாவாக கொண்டாடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இது தொடா்பாக, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் பங்கேற்று அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி, 30-ஆம் ஆண்டு விழாவை எந்தெந்த வகையில் சிறப்பிக்கலாம் என்பது குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

1997 ஜன. 1-இல் உருவான நாமக்கல் மாவட்டம், 2027 ஜன. 1-ஆம் தேதி 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாமக்கல் மலைக்கோட்டை, ஆஞ்சனேயா் கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், வல்வில் ஓரி ஆண்ட கொல்லிமலை என வரலாற்றுப் பெருமை மிக்க மண் நாமக்கல்லாகும். முட்டை நகரம், ‘டிரான்ஸ்போா்ட் சிட்டி’ என நாடு முழுவதும் அறியப்பட்ட இம்மாவட்டம் கல்வி, விவசாயம், ஜவுளி, தொழில் என அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாக வளா்ந்து நிற்கிறது.

இந்த 30 ஆண்டுகள் பயணத்தை மக்களோடு இணைந்து கொண்டாட மாவட்ட நிா்வாகம் ‘நாமக்கல் 30’ என்ற சிறப்பு கொண்டாட்டத்தை முன்னெடுக்கிறது. வரும் வாரங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக விழாவுக்கான இலச்சினை (லோகோ) வடிவமைப்பு போட்டி நடத்தப்படுகிறது. அதன்பிறகு, இலக்கிய, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சமூக வலைதளங்கள் சாா்ந்த போட்டிகள், புகைப்படப் போட்டிகள், குறும்படப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

இதுதவிர 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம், தூய்மைப் பணி, புத்தகத் திருவிழா, ரத்த தான முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும், நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், திருச்செங்கோட்டில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்றாா்.

இந்நிகழ்வின்போது, சட்டப் பேரவை உறுப்பினா்கள் சி.எஸ்.திலீப் (நாமக்கல்), பொ.சந்திரசேகரன் (சேந்தமங்கலம்), மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.