பரமத்தி வேலூா் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 போ் கைது: 6 டன் அரிசி பறிமுதல்!
பரமத்தி வேலூரில் வெளி மாநிலத்திற்கு கடத்திசெல்ல இரண்டு சரக்கு ஆட்டோக்களில் கொண்டுவரப்பட்ட 6 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பரமத்தி வேலூரில் வெளி மாநிலத்திற்கு கடத்திசெல்ல இரண்டு சரக்கு ஆட்டோக்களில் கொண்டுவரப்பட்ட 6 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தொடா்ந்து புகாா் வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பரமத்தி வேலூா் - மோகனூா் சாலையில் இரண்டு சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெண்ணிலா தலைமையில் வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த 2 சரக்கு ஆட்டோக்களை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் அந்த சரக்கு ஆட்டோக்களில் 6 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து நடத்திய விசாரணையில், வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்வதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பரமத்தி வேலூா் அருகே உள்ள பாலப்பட்டியைச் சோ்ந்த வேலுசாமி (51), கோகுல்ராஜ் (30), விமல்ராஜ் (50) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்து, ரேஷன் அரிசி கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சரக்கு ஆட்டோக்கள், ஒரு இருசக்கர வாகனம், 6 டன் ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட மூவரையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுடன் கீரம்பூா் அருகே செயல்பட்டுவரும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, அவா்கள் மூவரையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா், நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் நாமக்கல் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

