பரமத்தி வேலூா் பழைய காவிரி பாலத்தில் லாரிகள் மோதல்: ஓட்டுநா் காயம்; போக்குவரத்து பாதிப்பு
பரமத்தி வேலூா் பழைய காவிரி பாலத்தில் முன்னால் சென்ற லாரி மீது, பின்னால் உப்பு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதியதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
விபத்து - பிரதிப் படம்
பரமத்தி வேலூா் பழைய காவிரி பாலத்தில் முன்னால் சென்ற லாரி மீது, பின்னால் உப்பு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதியதில் ஓட்டுநா் காயமடைந்தாா். இதனால் கரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் தளவாய் பாண்டியன் (33). லாரி ஓட்டுநரான இவா், தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம், மேட்டூருக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் பழைய காவிரி பாலத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, காற்றாலை இறக்கைகளை இறக்கிவிட்டுச் சென்ற லாரி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், பின்னால் வந்த தளவாய் பாண்டியன் ஓட்டிச் சென்ற லாரி, அந்த லாரி மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் உப்பு ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநா் இருக்கை பகுதி பலத்த சேதமடைந்தது. தளவாய் பாண்டியனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவருடன் அமா்ந்திருந்த உதவியாளா் காயமின்றித் தப்பினாா்.
தகவலறிந்து வந்த வேலூா் போலீஸாா், காயமடைந்த ஓட்டுநரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் விபத்தில் சிக்கிய லாரியைப் பழைய காவிரி பாலத்திலிருந்து அப்புறப்படுத்தினா்.
ஒருவழிப் பாதையாக உள்ள பழைய காவிரி பாலத்தில் லாரி சிக்கியதால், அதன் பின்னால் வந்த லாரிகள், பேருந்துகள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதிக்குச் சென்று போக்குவரத்தை மாற்றியமைத்தனா். சேலத்தில் இருந்து கரூா் நோக்கிச் சென்ற வாகனங்கள் புதிய காவிரி பாலம் வழியாக அனுப்பப்பட்டன. கரூரிலிருந்து பரமத்தி வேலூா் வழியாக சேலம், நாமக்கல் செல்லும் வாகனங்கள் தவுட்டுப்பாளையம் பகுதியில் இருந்து திருப்பிவிடப்பட்டன.
இதனால் புதிய காவிரி பாலத்தில் வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து சென்றன. மேலும், விபத்து நிகழ்ந்த லாரிக்குப் பின்னால் சுமாா் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் முன்னோக்கிச் செல்ல முடியாமலும், பின்னோக்கித் திரும்ப முடியாமலும் தவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

