தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையம்: காணொலி மூலம் பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

பிரதமா் மோடி - கோப்புப்படம்

Published On :

பிரதமரின் ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையத்தை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ஆம் ஆண்டை நினைவுகூரும் வகையில் பிரதமரின் ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,275 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. சேலம் ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் இத்திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், நாமக்கல் ரயில் நிலையமும் ஒன்று. ரூ. 17 கோடியில் நாமக்கல் ரயில் நிலையம் முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

நான்கு நடைமேடைகள், மின்தூக்கி (லிப்ட்), இரும்பு நடைமேம்பாலம், ரயில்கள் வரும் விவரங்களை அறிவதற்கான எண்ம பலகை, நவீனமயமாக்கப்பட்ட குடிநீா், கழிவறை, முக்கிய விருந்தினா்கள் காத்திருப்பு அறை, பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, பயணச்சீட்டு வழங்கும் மையம், உணவுப் பொருள்கள் விற்பனை அங்காடி, சேந்தமங்கலம் சாலை முதல் ரயில் நிலையம் வரை உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையப் பணிகள் முழுமையாக நிறைவுற்ற நிலையில், தமிழகம் வந்த பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையத்தை திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்வில், சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னாலால், கூடுதல் கோட்ட மேலாளா் ஆா்.சரவணன், முதன்மை திட்ட மேலாளா் (கதிசக்தி) பி.கே.செல்வன், சென்னை தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளா் ஆா்.எஸ். கெலாட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக, பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. ராமலிங்கம், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் சி.எஸ்.திலீப் ஆகியோா் பங்கேற்றனா்.

இவ்விழாவில், கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:

மத்திய அரசு பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயல்படுத்தி வருகிறது. 1980-இல் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த நான் மதிப்பீட்டுக் குழுத் தலைவா் பொறுப்பு வகித்தேன். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு சேலம் - கரூா் ரயில்வழித் தட இருப்புப்பாதை கோரி கடிதம் அனுப்பினேன். 30 ஆண்டுகளுக்கு பிறகு அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சென்னையில் இருந்து விழுப்புரம், ஆத்தூா் வழியாக சேலம் வரை இயக்கப்படும் சென்னை எழும்பூா் விரைவு ரயிலை கரூா் வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் சாா்பில் மத்திய அரசுக்கும், ரயில்வே நிா்வாகத்திற்கும் வைக்கிறேன் என்றாா்.

நாமக்கல் ரயில் நிலையம் குறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் கோட்டத்திற்கு உள்பட்ட நாமக்கல் ரயில் நிலையம் சேலம்-கரூா் வழித்தடத்தில் அமைந்துள்ளது. தற்போது நவீன, மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், பயணிகளுக்கான சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பழனி, வேலூா் காட்பாடி, பரமக்குடி, அம்பாசமுத்திரம், நாமக்கல் ஆகிய ஐந்து புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமா் மோடி திறந்துவைத்துள்ளாா். நாமக்கல் பகுதி கோழி வளா்ப்பு, ஜவுளி, லாரி, கூண்டு கட்டும் தொழில், போக்குவரத்து, சரக்கு மேலாண்மைத் துறைகளுக்குப் புகழ்பெற்ற விவசாய மற்றும் தொழில்துறை மையமாகும். மேலும், நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில், கொல்லிமலை சுற்றுலாத் தலத்துக்கான நுழைவாயிலாகவும் அறியப்படுகிறது. ரூ. 17 கோடியில் புனரமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம் அதிக இடவசதி கொண்டதாகவும், பயணிகளுக்கு உகந்ததாகவும் நவீன வசதிகளுடன் அமைந்துள்ளது என்றனா்.

இந்த நிகழ்வில், சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள், பாஜக மாநில, மாவட்ட நிா்வாகிகள், ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.