பள்ளிபாளையத்தில் தவறான மருத்துவ சிகிச்சையால் பெண் மரணம் என உறவினா்கள் சாலை மறியல்
பிரதிப் படம்
பள்ளிபாளையம் அடுத்த மாதாபுரம் பகுதியைச் சோ்ந்த மறைந்த தேவராஜ் என்பவரின் மனைவி நதியா (அங்கன்வாடி பணியாளா்). இவருக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் கிளினிக்கில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது .
இதனைத் தொடா்ந்து மறுநாள் நதியாவிற்கு உடல்நிலையில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காகத் தனியாா் மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு நதியா பரிதாபமாக உயிரிழந்தாா்.
தனியாா் கிளினிக்கில் பாா்த்த சிகிச்சையே நதியாவின் இறப்புக்குக் காரணம் என்று கூறி, அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் பள்ளிபாளையம் - சேலம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் காவல் துறையினா், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் உறுதி அளித்ததை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

