மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக புதன்கிழமை குறைக்கப்பட்டது.
காவிரி பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் காவிரியில் தண்ணீர் திறப்பதை கர்நாடகம் நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்பிடிப்புப் பகுதி, தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, மாலையில் திடீரென 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை இது 14 ஆயிரம் கன அடியாக குறைந்து, மாலை 4 மணி நிலவரப்படி 13,496 கன அடியாக இருந்தது. இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரையிலும் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட நீரின் அளவு செவ்வாய்க்கிழமை 16 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
இது புதன்கிழமை 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பியிருக்கும் என்பதால் பாசனத்துக்கு தண்ணீர் தேவைப்படாது. இதனால் தொடர்ந்து மழை பெய்ய நேர்ந்தால் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.