முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்ட தாவரவியல் பூங்கா

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு
Updated on
2 min read

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வரும் இரண்டு பூங்காக்கள் எந்தவித முன்னறிவிப்பு இன்றியும், தொடக்க விழா இன்றியும் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 சேலத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயண நேரத்தில் உள்ள தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏற்காட்டில் லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் ஆகிய காட்சி முனைகள், ஏற்காடு ஏரி, ரோஜாத் தோட்டம், கிளியூர் நீர்வீழ்ச்சி, சேர்வராயன் கோயில் ஆகிய இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதாக உள்ளன.

 இந்த நிலையில் ஊட்டியில் உள்ளதைப் போன்று தாவரவியல் பூங்கா, ஐந்திணைப் பூங்கா 36 ஏக்கரில் உருவாக்க கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இதையடுத்து கடந்த 2011 பிப்ரவரி மாதம் ரூ. 7.50 கோடி மதிப்பில் பூங்கா உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

 நிழல் தரும் மர வகைகள் கொண்ட பூங்கா, ரோஜா பூங்கா, போன்சாய் மரங்கள் கொண்ட பூங்கா, செடிகளிலேயே பல்வேறு விலங்குகளின் உருவ பொம்மைகளை காட்சிப்படுத்தும் பூங்கா, பல்வேறு வண்ணங்களில் பூக்களைத் தரும் செம்பருத்திப் பூ தோட்டம், கல் தோட்டம், புல் தரை பூங்கா, பழம் தரும் கனிகள் பூங்கா, மூங்கில் தோட்டம் என்று பல்வேறு தோட்டங்கள் இங்கு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 மேலும் இங்கு வரும் பயணிகளின் வசதிக்காக ஓய்வு அறை, உணவு அருந்தும் அறை, கண்ணாடி மாளிகை, நிழல் வலைக் கூடம், சேலம், ஏற்காடு நகரின் அழகைக் காணும் வகையில் காட்சி முனைகள், மரங்கள் செடிகளுக்கு நவீன முறையில் நீர் ஊற்றும் செயற்கை பாதை, பூங்கா முழுவதும் வண்ண அலங்கார விளக்குகள், பயணிகள் நிழல் ஓய்வு அறைகள், டேன் ஹோப் நிறுவன கேன்டீன், தகவல் மையம், கண்ணாடி மாளிகை, பெரணி மாளிகை, திறந்த வெளி புல்தரைகள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 பணிகள் முழுவதும் நிறைவு பெறாத நிலையில் கடந்த திங்கள்கிழமை முதல்வர் ஜெயலலிதாவால் விடியோ கான்பரன்ஸிங் முறையில் இந்த பூங்காக்கள் திறக்கப்பட்டன. அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள், ஏற்காடு ஒன்றியத் தலைவர் அண்ணாதுரை, ஊராட்சித் தலைவர் முரளி உள்ளிட்ட ஒரு சில அதிமுக பிரமுகர்கள் ஏற்காடு பூங்காவில் திறப்பு விழா அன்று சுற்றிப்பார்த்துள்ளனர்.

 திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட எந்த ஒரு முக்கிய அரசு அலுவலரும் கலந்து கொள்ளவில்லை. வழக்கமாக விடியோ கான்பரன்ஸிங்கில் விழா நடைபெற்றால் சம்பந்தப்பட்ட இடத்திலும் விடியோ காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். ஆனால் ஏற்காடு பூங்கா திறப்பு விழாவுக்கு இந்த ஏற்பாடு செய்யப்படவில்லை. மேலும் ஊடகங்களுக்கும் பூங்கா திறக்கப்பட்ட தகவல் ஒருநாள் கழித்தே தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பூங்கா பணிகள் என்பதால் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், ஏற்காட்டில் வசிப்பவர்களுக்கே தெரிவிக்கப்படாமல் விழா நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பூங்கா தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அது முழுமையாக செயல்பட பல ஆண்டுகள் ஆகும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com